வியாழன், 4 டிசம்பர், 2008

கிழக்கு வன்னி எதிர்நோக்கும் உக்கிர போர்



தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் இவ்வருட மாவீரர் தின உரையில் வன்னிப் போர் தொடர்பாக பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. நெருக்கடிகள் நிறைந்த வரலாற்றுப் பயணத்தில் ஏற்பட்ட பல சரிவுகள், திருப்பங்கள், பெருத்த நம்பிக்கைத் துரோகங்கள், நாசச் செயல்கள், புயலாக எழுந்த நெருக்கடிகள் என்பவற்றுடன் ஒப்பிடும்போது இன்றைய சவால்கள் எமக்கு பெரியனவல்ல என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார்.

மாவீரர் தினத்தன்று கிளிநொச்சியைக் கைப்பற்றி வெற்றிச் செய்தியை தென்னிலங்கைக்கு அரசாங்கம் அறிவிக்கப் போவதாக சிலர் கூறினர். ஆனால் கிளிநொச்சியை நோக்கி படையினர் மும்முனைகளில் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கைகள் யாவற்றையும் கடும் எதிர்த் தாக்குதலை நடத்தி புலிகள் முறியடித்தனர். குஞ்சுப் பரந்தன் நோக்கியும், புதுமுறிப்பு நோக்கியும், முறிகண்டி இரணைமடுச் சந்தி நோக்கியும் பெருமெடுப்பில் நகர்ந்த படையினர் புலிகளின் முறியடிப்பு படையணிகளின் வியூகத்தினுள் சிக்கியது. வடபோர்முனையில் கிளிநொச்சியும் அதனையடுத்த பரந்தனும் இன்றைய நிலையில் படைத்துறையினரின் உயர்ந்த பட்ச இலக்கு. இந்த இலக்கினை படையினர் அடைவதற்கு புலிகள் எந்தளவுக்கு விட்டுக்கொடுப்பார்கள் என்பது கேள்விக்குறியே.

ஏனெனில், நீண்ட நாட்களாக தற்காப்புச் சமரில் ஈடுபட்டு வந்த விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி மிகவும் சுருங்கி விட்டது. வன்னிப் பெருநிலப்பரப்பின் 25 சதவீதப் பகுதியே தற்போது அவர்களின் இறுக்கமான ஆளுகைக்குட்பட்ட பிரதேசமாக இருப்பதனால் மேன்மேலும் பின்நகர்வுகளை செய்ய முடியாத நிர்ப்பந்தம் ஏற்பட்டு விட்டது. இதனாலேயே படையினரின் முன்நகர்வு முயற்சிக்கு கடும் எதிர்த் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
கிளிநொச்சி நகருக்கு மிக அண்மையாகவே படையினர் நிலையெடுத்திருக்கின்ற நிலையிலும் கண்ணுக்கெட்டிய தூரத்திலுள்ள கிளிநொச்சி நகரை நெருங்கமுடியாமல் உள்ளது.

புலிகளைப் பொறுத்தவரை கிளிநொச்சிப் பகுதியும், முகமாலைப் பகுதியும், மிக முக்கியமான போராட்ட களம். இப்பகுதியில் ஏற்படுகின்ற இராணுவ பாதகத் தன்மை கிழக்கு வன்னியின் இருப்பை தலைகீழாக மாற்றவல்லது. எனவே இப்பகுதிக்கான சண்டை என்பது புலிகளால் விட்டுக் கொடுக்க முடியாத அல்லது இழக்கப்பட முடியாத கேந்திர முக்கியத்துவத் தன்மை வாய்ந்தது. எனவேதான் மேற்குவன்னியில் முழுமைப் பகுதியையும் படிப்படியாக விட்டுக் கொடுத்த புலிகள் இக்களமுனையில் கிளாலி தொடக்கம் நாகர் கோயில் வரையிலான முன்னரங்கப் பகுதியில் கடும் பதில் தாக்குதல்களை நடத்துகின்றனர்.

ஏ9 வீதியை முழுமையாக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவராமல் ஏ32 வீதி வழியே பூநகரியூடான யாழ்ப்பாணத்திற்கான தரைவழிப் பாதை பாதுகாப்பானதாக இருக்கப் போவதில்லை. ஏனெனில், யாழ்க்குடாவுடன் ஏ32 வீதியை இணைப்பதற்கு சங்குப்பிட்டியிலிருந்து கேரதீவுக்கு இடைப்பட்ட கடல் நீரேரிப் பகுதியில் சிறிது தூரத்திற்கு படகுப் பயணம் மேற்கொள்வது சிரரமானதும், பாதுகாப்பற்றதும் கூட. எனவே தற்போதைய நிலையில் யாழ்ப்பாணத்திற்கான பூநகரியூடான தரைவழிப்பாதை என்பது பெரிய அளவில் பயனற்றதொன்றாகவே கருத முடியும்.

படையினர் ஏ9 வீதியை இலக்கு வைத்து மாங்குளத்தில் ஊடறுப்புத் தாக்குதலைச் செய்து வீதியைக் குறுக்கறுத்து ஆறு மைல் தூரத்திற்கு பெட்டியடித்து நிலை கொண்டதனால் கிழக்கு வன்னியின் தென் அரைப் பாகத்திலிருந்து புலிகள் பின்வாங்கி விட்டனர். இதனால் இன்று மாங்குளம், கிழவன்குளம் தொடக்கம் ஓமந்தை வரையான கிட்டத்தட்ட 25 மைல் தூரத்தில், இராணுவப் பெட்டிக்குள் அடங்கும் ஆறுமைல் தவிர்ந்த ஏனைய பகுதி இன்று யாருமற்ற சூனியப் பிரதேசமாகக் கிடக்கிறது.

அதுமட்டுமல்லாமல் வவுனியா வடக்கு பிரதேசச் செயலகப் பிரிவுக்குட்பட்ட நெடுங்கேணி, குளவிசுட்டான், நைனாமடு, சின்னடம்பன், கனகராயன்குளம், புளியங்குளம், புதூர், அனந்தர்புளியங்குளம், மருதோடை, வெடிவைத்தகல்லு, ஊஞ்சால்க்கட்டி, மற்றும் பன்றிக்கெய்தகுளம், சேமமடு ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப்பெரிய பிரதேசம் சூனியப் பிரதேசமாக மாற்றமடைந்திருக்கின்றது. காரணம், மாங்குளத்திலிருந்து கிழக்கு நோக்கி நகர்ந்த படையினர் ஒலுமடு கிராமத்தைக் கைப்பற்றியதோடு அங்கிருந்து நேர் கிழக்காக காடுகளுக்கூடாக நகர்ந்து தண்ணிமுறிப்புக்குளப் பகுதியில் நிலைகொண்டிருக்கும் 59ஆவது டிவிசன் படையினருக்கிடையில் தொடர்ச்சியற்ற இணைப்புக்களை ஏற்படுத்தியிருக்கின்றனர்.

எனினும், இப்பகுதியினுள் படையினர் நுழைவதை தவிர்த்திருக்கின்றனர். காரணம் இப்பெரும்பகுதியில் நிலைகொள்வதற்கு பெருமெண்ணிக்கையிலான படையினர் தேவைப்படுகின்றனர். கிழக்கு வன்னியில் ஏ9, ஏ34, ஏ35 ஆகிய மூன்று வீதிகளும் இணையும் முக்கோணப் பிரதேசத்தினுள் தான் ஒட்டுமொத்த வன்னி மக்களும் தஞ்சமடைந்திருக்கின்றனர். எனவே இப்பகுதியில் இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் அங்கு தஞ்சமடைந்துள்ள மக்களின் நிலை ஆபத்தானதொன்றாகவே மாறிவிடும்.

இவ்வாறு மக்கள் செறிவாக ஒடுக்கப்பட்டிருக்கின்ற கிழக்கு வன்னியின் வட அரைப்பாக முக்கோண வலயத்தினை நோக்கி படையினர் நகர்வார்களேயானால் அதனை எதிர்த்து புலிகளும் மூர்க்கமான தாக்குதலை மேற்கொள்வது தவிர்க்க முடியாததொன்றாகவே அமையும். அவ்வாறு சண்டைகள் உக்கிரமடைந்தால் படையினரின் கடுமையான ஆட்லறிப் பல்குழல் எறிகணை வீச்சுக்கும், விமானத் தாக்குதலுக்கும் இப்பிரதேசம் உள்ளாகும் பட்சத்தில் மிகப்பெரும் மனிதப் பேரவலம் ஏற்படுவது மிகக்கசப்பான உண்மையே. படையினரின் இத்தந்திரோபாயத்தின் மூலம் குறிப்பிட்டளவு வன்னிமக்களை தம்பக்கம் கவர்ந்துவிட முடியும் என நம்புகின்றனர். ஆனால் இதற்கெதிராக புலிகள் என்னதான் மாற்று வியூகம் எடுக்கப் போகிறார்கள் என்பதிலேயே வன்னிமக்களின் வாழ்வு தங்கியுள்ளது.

அடுத்து, மணலாற்றுப் பகுதியினூடாக முன்னகர்ந்த 59 ஆவது டிவிசன் படையினர் மணலாற்றுக் காட்டுப் பகுதியின் பெரும்பகுதியில் நிலைகொண்டுள்ளதோடு தண்ணிமுறிப்புக்குளப் பகுதியையும், குமுழமுனைப் பகுதியையும் தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருக்கின்றனர். கிழக்குக் கடற்கரையிலிருந்து குமுழமுனை, தண்ணிமுறிப்பு, தட்டாமலை வரையான வீதிக்கு தெற்குப்புறம் முழுவதும் படையினர் நிலைகொண்டிருப்பதனால் முல்லைத்தீவு மாவட்டத்தின் முக்கிய சனச்செறிவு மிக்க முள்ளியவளை, தண்ணீரூற்று ஆகிய பகுதிகள் இராணுவ நிலையிலிருந்து ஆறு அல்லது ஏழு மைல்கள் தூரத்திற்குள்ளேயே உள்ளடங்குவதனால் இங்கிருந்தும் இடம் பெயர வேண்டிய நிலை ஏற்படக்கூடிய சாத்தியங்கள் உள்ளன.

இவ்வாறு மேற்கு வன்னியையும் இழந்து தற்போது கிழக்கு வன்னியின் தென்னரைப் பாகத்தையும் விட்டுக் கொடுத்து கிழக்கு வன்னியின் வடஅரைப்பாகத்தில் செறிவாக ஒதுங்கி நிலையெடுத்திருக்கும் விடுதலைப் புலிகள் மேன்மேலும் பின்வாங்குவதற்கோ அல்லது விட்டுக் கொடுக்கவோ நிலப்பகுதிகள் இல்லை என்ற நிலையை அடைந்திருப்பதனால் வன்னிக் களமுனை உக்கிர மோதல்களை எதிர்நோக்கியிருக்கிறது.

வன்னியன்

கருத்துகள் இல்லை: