திங்கள், 1 டிசம்பர், 2008

சேர்.பொன். இராமநாதனின் வரலாற்றை தெரிந்த எந்தவொரு சிங்களவரும் தமிழருக்கு எதிராக செயற்பட மாட்டார்கள்


சட்டநிர்ணய சபையில் சிங்கள மக்களுக்காக சேர்.பொன் இராமநாதன் எவ்வாறு குரலெழுப்பினார் என்பதை எந்தவொரு சிங்களவரும் உணர்வார்கள் என்றால் தமிழினத்திற்கு எதிராக ஒரு போதும் தன்கையை உயர்த்த மாட்டான் என்று அகில இலங்கை இந்து மாமன்றத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி கந்தையா நீலகண்டன் தெரிவித்துள்ளார்.

சேர்.பொன். இராமநாதனின் 78 ஆவது நினைவு தின வைபவம் பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்ற போது நினைவுப் பேருரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

கொழும்பு விவேகானந்த சபை, அகில இலங்கை இந்து மாமன்றம்,இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி என்பன இணைந்து நடத்திய இந்த நினைவு தின வைபவத்திற்கு விவேகானந்த சபையின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ஏ.ஆர்.சுரேந்திரன் தலைமை தாங்கினார்.

சட்டத்தரணி கந்தையா நீலகண்டன் தொடர்ந்து பேசுகையில்;

சேர். பொன்னம்பலம் இராமநாதன் இந் நாட்டின் சரித்திரத்தில் ஓர் அத்தியாயமாக வாழ்ந்திட்ட ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலை சிறந்த தலைவர். எல்லோராலும் போற்றப்பட்ட சிறந்த ஒரு கல்விமான்.

சட்டத்துறையில் அழிக்க முடியாத தடம் பதித்த சட்ட விற்பன்னர். சட்ட நிரூபண சபையில் சரித்திரம் படைத்த பெருமகன், ஆன்மீகத் துறையில் ஆழ்ந்த அறிவு மிக்க அறிஞர் மட்டுமல்ல, இந்து மதத்தின் பெருமையை பாரெல்லாம் பறைசாற்றி இந்து மக்களுக்காக ஆலயம் அமைத்து அறங்காவலர் பணியை திறம்பட மேற்கொண்டவர்.

சர்வதேச புகழ் பெற்ற ஒரு தேசிய பெரும் புள்ளி என இந்திய தலைவர் கே.பி.எஸ்.மேனனால், வர்ணிக்கப்பட்ட பெரியவர்.

சிங்கள மக்களின் நற்பெயருக்கு மாசு கற்பிக்கப்பட்டபோது, சிங்கள இனம் முழுவதுமே அழியப் போகும் தறுவாயில், அம் மக்களுக்காக போராடி வெற்றி பெற்றவர்.

நன்றி மறவா மக்களின் உள்ளங்களில் என்றும் பதிந்திருக்கப் போகும் ஒரு தமிழன் என பழம் பெரும் சிங்களத் தலைவரால் வர்ணிக்கப்பட்டவர்.

இவர் மறைந்தால் சிங்கள மக்களுக்காகப் போராடவும், அவர்களைப் பாதுகாத்து வழிகாட்டவும் ஒருவரும் இல்லாத இனமாகி விடும் என அனாகரிக தர்மபாலவினால் போற்றப்பட்ட இந்து மகன்.

தமிழிலும் ஆங்கிலத்திலும் பாண்டித்தியம் பெற்றவர். அது மட்டுமல்ல, இலங்கையின் தேசப்பற்றாளன் என ஆங்கில ஆளுநரால் வர்ணிக்கப்பட்ட தேச பக்தர். நூறு வருட வரலாற்றில் பிரிட்டிஷ் ஆட்சியில் மாபெரும் பங்கு ஏற்று பெருமை பெற்றவர். இவரை விட யாரும் இல்லை என வணங்கிப் போற்றப்பட்டவர்.

இப்படியாக வார்த்தைகளால் அளந்து கொள்ள முடியாத பேரும் புகழும் மிக்க ஒரு தலைவர் எல்லாவற்றுக்கும் மேலாக தமிழனாகப் பிறந்து சைவப் பெருமகனாக உதித்து தான் ஒரு மறத்தமிழன் சைவப் புதல்வன் என்பதை இறுதி மூச்சு வரை மறவாது மறைந்த ஒரு புனித ஆத்மா. புண்ணியப் பிறவி என்றார்.

தலைமையுரையாற்றிய ஜனாதிபதி சட்டத்தரணி ஏ.ஆர்.சுரேந்திரன் கூறியதாவது;

சேர். பொன்னம்பலம் இராமநாதனின் பெயர் கொண்ட இந்து மகளிர் கல்லூரியில் அவரது நினைவு தின வைபவம் நடைபெறுவது மிகவும் பொருத்தமானது.

தமிழர் பண்பாட்டை விட்டுக் கொடுக்காத சட்டத்துறையில் எவரும் அடைந்திராத ஸ்தானத்தை பெற்றிருந்தவர் சேர். பொன்னம்பலம் இராமநாதன் என்றார்.

இராமநாதன் கல்லூரி மாணவிகளின் தேவாரத்துடன் ஆரம்பமான இந்த நிகழ்வில் கல்லூரி அதிபர் திருமதி கோதை நகுலராஜா வரவேற்புரையாற்றினார்.

கொழும்பு விவேகானந்த சபையின் பொதுச் செயலாளர் ராஜ புவனீஸ்வரன் நன்றி கூறினார். பெரும் திரளானவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

நாம் எங்கு செல்கிறோம் என்ற தலைப்பில் கவியரங்கும் இடம்பெற்றது

கருத்துகள் இல்லை: