வியாழன், 11 டிசம்பர், 2008

பொருளாதார அபிவிருத்திக்கான திட்டங்கள் அரசாங்கத்திடம் இல்லாததே அரசிலிருந்து நான் விலகக் காரணம்


பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்படும் யுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்தே நான் அரசாங்கத்தில் இணைந்துகொண்டேன். அதே வேளை, பொருளாதார அபிவிருத்திக்கான திட்டங்கள் அரசாங்கத்திடம் இல்லாத காரணத்தால் தான் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொண்டேன்.''

இவ்வாறு கரு ஜெயசூரிய தெரிவித்தார்.

கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவராக அமைச்சர் கரு ஜெயசூரிய தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பேசிய கரு ஜெயசூரிய கூறியதாவது : ''ஐ.தே.கவுடன் வந்து இணைந்து கொண்டது, எனது பிறந்த வீட்டுக்கு வந்து சேர்ந்தது போல் இருக்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக என்னை நியமித்தமைக்காக கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், கட்சி உறுப்பினர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்படும் யுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்தே நான் அரசாங்கத்தில் இணைந்துகொண்டேன். அதே வேளை, பொருளாதார அபிவிருத்திக்கான திட்டங்கள் அரசாங்கத்திடம் இல்லாத காரணத்தால் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொண்டேன்.

யுத்தத்தினூடாகப் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்தக் கூடியதாக இருந்தமை குறித்து நான் பெரும் திருப்தி அடைகின்றேன். மேலும் கிழக்குப் பிரதேசம், மன்னார் ஆகியவை கைப்பற்றப்பட்டு விட்டன. இப்போது கிளிநொச்சியை நோக்கிப் படை நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

நான் ஐ.தே.கவுடன் இணைந்தமை தொடர்பில் பல ஊடகங்களில் பலவாறு செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. நான் விடுதலைப்புலிகள் சார்பாக செயற்பட போவதாகக் கூட கூறப்படுகின்றது. நான் அக்கூற்றை முழுமையாக எதிர்க்கிறேன்.

நான் இந்த நாட்டைச் சேர்ந்தவன். நான் ஒரு போதும் எமது நாட்டைக் காட்டிக் கொடுக்கப் போவதில்லை. நாம் பயங்கரவாதத்தை எதிர்க்கின்றோம். நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான கொள்கைகளை ஐ.தே.க. முன்னெடுத்துச் செல்கிறது.

17ஆவது சீர்திருத்தச் சட்ட மூலத்தை உரிய முறையில் அமுல்படுத்துமாறு ஐ.தே.க. பல அழுத்தங்களைக் கொடுத்த வண்ணமுள்ளது. 17ஆவது தீர்திருத்தச் சட்டமூலத்தை உரிய முறையில் அமுல்படுத்துமாறு கோரி நாம் ஜனாதிபதியிடம் பல தடவைகள் கோரிக்கைகளை முன்வைத்தோம். இது தொடர்பில், ஆராய குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. இது உரிய முறையில் நிறைவேற்றப்படும் என நாம் நம்புகிறோம்.

இரண்டாவதாக பொருளாதாரம் . உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியினால் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இலங்கையின் பொருளாதார வளர்ச்சி அடுத்த வருடம் நான்கு வீதமாகக் குறை யலாம். எனவே, நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம் என உலக வங்கி எதிர்வு கூறியுள்ளது.

அதே போன்று ஆசிய பொருளாதாரம் 5.6 ஆகக் குறைவடையாலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதனால் பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் பல செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அப்போதுதான் ஐதேகவினால் தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வை எடுக்க முடியும்.

அதே வேளை எமது உறுப்பினர்களுக்கு நான் கூறவிரும்புவது இதுதான். அதாவது எமது கட்சி உறுப்பினர்களுக்கிடையில் ஒற்றுமை நிலவ வேண்டும். ஒன்றிணைந்து செயற்பட்டால் ஒரு கட்சி என்ற வகையில் நாம் எந்தக் காரியத்தையும் முன்னெடுத்துச் செல்லக்கூடியதாக இருக்கும்.

கட்சியின் சார்பில் என்னாலான முழு ஒத்துழைப்பையும் எதிர்வரும் காலங்களில் வழங்குவதாக நான் இத்தால் உறுதி ப்படுத்துகின்றேன்.'' இவ்வாறு கரு ஜெயசூரியா தெரிவித்தார்.

ரணில் விக்ரம சிங்க

ஐ.தே.கவின் தலைவர் ரணில் விக்ரம சிங்க கருத்துத் தெரிவிக்கையில்,

''அமைச்சர் கரு ஜெயசூரிய பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டமை எமது கட்சி எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு உறு துணையாகவும் உந்து சக்தியாகவும் அமையும். அதே போன்று கட்சியின் உப தலைவராக ருக்மன் சேனநாயக்க தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அவர் கட்சிக்காக பல சேவைகளைக் கடந்த காலங்களில் செய்து வந்தவர்'' என்றார்.

டாக்டர் ஜெயலத் ஜெயவர்த்தன

டாக்டர் ஜெயலத் ஜெயவர்த்தன பேசுகையில், ''நாம் எமது கட்சியின் முன்னேற்றம் கருதி பல கருத்துக்களை முன் வைத்திருந்தோம். அவை இன்று நிறைவேறியுள்ளமை மகிழ்வைத் தருகின்றது. எமது கட்சி இன்று பலம் வாய்ந்த, வெற்றியை நோக்கிய ஒரு கட்சியாகக் காணப்படுகிறது. கட்சியின் சார்பில் உபதலைவர் மற்றும் பிரதி தலைவருக்கான ஆதரவை நாம் வழங்கினோம். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரதும் கட்சியாக ஐ.தே.க. காணப்படுகிறது. நாம் வன்முறைகளற்ற முறையில் எமது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வோம்'' என்றார்.

சஜித் பிரேமதாஸ

ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ கருத்துத் தெரிவிக்கையில், ''கரு ஜெயசூரிய அவர்கள் எம்முடன் இணைந்தது எமக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தருகின்றது. அவர் உலக நடைமுறைக்கு ஏற்றவகையில் தீர்மானங்களை எடுத்து கட்சியை வழிநடத்துவார். ஐக்கிய தேசியக் கட்சியுடன் மீள இணைந்து பிரதித் தலைவராக அவர் பதவியேற்றிருப்பது வரவேற்கத்தக்கதே. நாட்டு மக்களுக்குச் சமாதானத்தையும் சுபீட்சமான வாழ்வையும் ஏற்படுத்திக் கொடுக்க, எம்முடன் இணைந்து கொள்ளுமாறு அரசை சார்ந்து நிற்கும் ஏனைய ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நான் அழைப்பு விடுக்கின்றேன்'' என்றார்.

கருத்துகள் இல்லை: