திங்கள், 22 டிசம்பர், 2008

தமிழீழ விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்டுள்ள "மோட்டார் பருவமழை" தாக்குதல்: இக்பால் அத்தாஸ்



இலங்கை அரசாங்கம் தெரிவித்து வந்ததைப்போன்று 2008 ஆம் ஆண்டுக்குள் கிளிநொச்சியையும் முல்லைத்தீவையும் கைப்பற்றமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே 2009 ஆம் ஆண்டிலும் யுத்தம் தொடரப்போவதாக போரியல் ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார்.

படைத்தரப்பு கடந்த வருடம் 32 ஆயிரம் பேரை படைகளில் இணைத்துக் கொண்டனர். இந்த வருடத்துக்குள் 38 ஆயிரம் பேரை படைகளில் சேர்த்துக் கொண்டனர். படைத்தரப்பு தொடர்ந்தும் பெற்றுவந்த யுத்த வெற்றிகளுக்கு மத்தியிலேயே இந்த ஆட்சேர்ப்புகள் இடம்பெற்று வந்தன.

இந்தநிலையில் இராணுவத்தினர் விசேட படை 5 என்ற பிரிவை தற்போது உருவாக்கி வருகின்றனர். அத்துடன் இராணுவ கொமாண்டோ பிரிவுகளையும் உருவாக்கும் திட்டத்தை படையினர் மேற்கொண்டு வருவதாக இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் இடம்பெயர்ந்துள்ள மக்களை நேரடியாக சந்தித்து தமிழ் மக்களை காப்பதற்கான இறுதி யுத்தத்தில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும், கிளிநொச்சியையும், முல்லைத்தீவையும் படைத்தரப்பின் கைகளுக்கு செல்வதை தாம் இறுதிவரை தடுக்கப்போவதாக அவர்கள் தெரிவித்துள்ளதாக இக்பால் அத்தாஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் நேற்று முறிகண்டி - இரணைமடுப் பகுதியி;ல் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பாரிய மோதலில் இரண்டு தரப்பிலும் அதிகளவு இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இதன்போது தமிழீழ விடுதலைப் புலிகள் படையினர் மீது மேற்கொண்ட மோட்டார் தாக்குதலை இக்பால் அத்தாஸ், "மோட்டார் பருவமழை" என வர்ணித்துள்ளார்.

இந்த சம்பவம் தமிழீழ விடுதலைப் புலிகளின் இன்னமும் போதியளவு ஆயுதங்கள் கையிருப்பில் இருப்பதையே உணர்த்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: