வியாழன், 4 டிசம்பர், 2008

மும்பை தாக்குதல் குறித்து இந்தியாவுக்கு ஒரு மாதத்திற்கு முன்னரே எச்சரித்தோம்

அமெரிக்கா தெரிவிப்பு

கடல் வழியாக ஊடுருவி மும்பை மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடுமென ஏற்கனவே இரண்டு தடவைகள் இந்தியாவை எச்சரித்தோமென அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இத்தகைய தாக்குதல் சம்பவம் நடைபெறக்கூடும் என்று ஒரு மாதத்துக்கு முன்பே மத்திய அரசுக்கு எச்சரிக்கை செய்ததாக அமெரிக்க தீவிரவாதத் தடுப்பு அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி சி.என்.என். தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஒரு தடவை அல்ல இரண்டு தடவை எச்சரிக்கை செய்தோம். தாஜ் ஹோட்டல் உட்பட சில குறிப்பிட்ட இடங்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் என்று எச்சரிக்கப்பட்டதாகவும் சி.என்.என். மேலும் கூறியுள்ளது.

கடல் மார்க்கமாக தீவிரவாதிகள் மும்பைக்குள் நுழைந்து தாக்குதல் தொடுப்பார்கள் என்று உளவு அமைப்பு எச்சரித்தது என்று குறிப்பிட்ட அந்த அதிகாரி, தனது பெயரைச் சொல்ல மறுத்துவிட்டார்.

இதனிடையே, மும்பை தாக்குதல் தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்தது உண்மைதான் என்பதை சி.என்.என். தொலைக்காட்சியிடம் இந்திய பாதுகாப்புப்படை ஒப்புக்கொண்டது.

நவம்பர் 18 ஆம் திகதி செயற்கைக்கோள் போன் மூலமாக பாகிஸ்தானில் உள்ள எண்ணுக்கு அழைப்பு செல்வதை இந்திய உளவுப் பிரிவினர் மறித்துக் கண்டறிந்தனர். இந்த எண் பாகிஸ்தானில் உள்ள லஷ்கர்இதொய்பா அமைப்பினரால் பயன்படுத்தப்படுவதாகும். இந்த அழைப்புக்குப் பிறகே மும்பையில் தாக்குதல் நடந்துள்ளது என உளவு அமைப்பினர் தெரிவித்ததாக மற்றொரு செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

இந்த அழைப்பை இடைமறித்து கேட்டபோது, கடல் மார்க்கமாக வந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்பது தெரிய வந்ததாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

இந்நிலையில், மும்பை தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட போன்கள், சிம் கார்டுகளை வைத்து கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து அமெரிக்க உளவு அமைப்பினர் துருவி ஆராய்கின்றனர். இதன் மூலம் பாகிஸ்தான் தொடர்புடயை ஏராளமான துப்புகள் கிடைத்துள்ளன. மேலும் யார் யாருக்கு தொடர்பு இருக்கும் என்பதெல்லாம்கூட தெரியவந்துள்ளது என்றும் சி.என்.என்.

ரி.வி.க்கு அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரு செல்போன் சிம் கார்ட் அமெரிக்காவில் வாங்கப்பட்டது. இப்போது விசாரணை நடப்பதால் வேறு தகவல் எதையும் தெரிவிப்பதற்கு இல்லை என்று அந்த அதிகாரிகள் தெரிவித்ததாக எ.பி.சி.நியூஸ் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: