வெள்ளி, 19 டிசம்பர், 2008

புலி ஆதரவு பேச்சு: இயக்குனர் சீமான் கைது

Seeman
சென்னை & திண்டுக்கல்: விடுதலைப் புலிகளை ஆதரித்தும், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை தாக்கியும் பேசிய இயக்குனர் சீமான், காங்கிரஸ் கட்சியின் நெருக்குதலையடுத்து இன்று மீண்டும் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல்லை அடுத்த தேவதானப்பட்டியில் சூட்டிங் ஸ்பாட்டில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.

இலங்கை பிரச்சனை தொடர்பாக ராமேஸ்வரத்தில் நடந்த திரைப்பட கலைஞர்கள் பொதுக் கூட்டத்தில் ஆவேசமாக பேசிய இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இயக்குனர் சீமான் அண்மையில் ஈரோட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை ஆதரித்தும், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை தாக்கியும் அவர் பேசினார்.



இந்த மண்ணில் (தமிழகத்தில்) இன்னொரு பிரபாகரன் பிறக்கும் வரை தமிழினம் மீளாது என்று அவர் ஆவேசமாக பேசினார்.

இதையடுத்து சீமானை கைது செய்ய வேண்டும் என காங்கிரசார் போராட்டத்தில் குதித்தனர்.

'குண்டாஸ்'-தங்கபாலு கோரிக்கை:

சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு கோரினார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில்,

ராஜீவ் காந்தி இலங்கை தமிழர்களை அழிக்க அமைதிப் படையை அனுப்பியதாகக் கூறி இந்திய நாட்டையும், அமைதிப் படையையும் கொச்சைப்படுத்தி பேசுவதும், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேசுவதும், ராஜீவ் காந்தியின் படுகொலையில் முதல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பிரபாகரனை தமிழர் தலைவர் என்று புகழ்பாடுவதும் இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது மட்டுமல்ல பயங்கரவாதத்தை ஆதரித்து பேசுகிற தேசவிரோத குற்றமும் ஆகும்.

இலங்கையில் தமிழர்கள் சமமான வாழ்வுரிமை பெற வேண்டும் என்பதற்காக, அவர்களது மீட்சிக்காக, வாழ்வு மேம்பாட்டிற்காக உரிய நடவடிக்கைகளை உணர்வோடு மேற்கொண்ட ராஜீவ் காந்தி, சிங்கள வெறியரால் தாக்கப்பட்டதும், அதைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் என்ற வெடிகுண்டு இயக்கத்தால் படுகொலை செய்யப்பட்ட கொடிய நிகழ்ச்சியையும் கொச்சைப்படுத்தி பேசுகிற யாரும் உண்மையான தமிழனாக இருக்க மாட்டார்கள்.

இந் நிலையில் ஈரோட்டில் சினிமா இயக்குநர் சீமானும், மற்றும் அவரோடு சிலரும் பேசிய பேச்சுகள் தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்கும் செயலாகவும், சட்டவிரோதமானதும் ஆகும். அவர்கள் பேசி 72 மணி நேரம் ஆனதற்குப் பிறகும் இத்தகைய வன்முறைப் பேச்சுக்களை கேட்டுக் கொண்டு அவர்கள் மீது தமிழக போலீஸ் துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?. யாரை திருப்திபடுத்துவதற்காக?.

இந்த செய்திகள் முதல்வர் கருணாநிதியின் பார்வைக்கு வந்துள்ளதா?. அல்லது மறைக்கப்பட்டுள்ளதா?.

ஏற்கனவே ராமேஸ்வரம் கூட்டத்தில் ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி ஆகிய தலைவர்களின் படுகொலையை நியாயப்படுத்தி பேசிய இவர்கள் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டபோது தமிழக போலீஸ் துறை சார்பில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காததைத் தொடர்ந்து இன்றைக்கு அதே பேர்வழிகள் அதேபோன்ற தேசவிரோத பேச்சுக்களை பேசி வருகிறார்கள்.

இவ்வாறு அன்றாடம் காங்கிரஸ் பேரியக்கத்தையும், இந்திய திருநாட்டையும், ராஜீவ் காந்தியையும் கொச்சைப்படுத்தி பேசிவரும் பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன். ராஜீவ் காந்தியையும், இந்திரா காந்தியையும் அவர்களது வழியில் இன்றைக்கு சோனியா காந்தியும் தான் இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமைக்காக உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருபவர்கள்.

இவைகளுக்குப் பிறகும் தேசவிரோத, மக்கள் விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் சீமான் போன்றவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியை கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

படப்பிடிப்பில் வைத்து கைது:

இந் நிலையில், திண்டுக்கல் அருகே தேவதானப்பட்டியில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த சீமானை, ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் இன்று கைது செய்து அழைத்துச் சென்றனர்.

கருத்துகள் இல்லை: