புதன், 10 டிசம்பர், 2008

அரசாங்கத்தை விட்டு வெளியேறக் காரணம்: கரு ஜெயசூரிய விளக்கம்



17ஆவது திருத்தச் சட்டமூலத்தை உரிய முறையில் அமுல்படுத்தாமையும் பொருளாதார நெருக்கடியை சிறந்த முறையில் நிர்வகிக்காமையுமே அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு காரணமாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சராக பதவி வகித்த கரு ஜெயசூரிய நேற்று அமைச்சுப் பதவியினை இராஜினாமா செய்ததுடன் அரசாங்கத்திலிருந்தும் வெளியேறியுள்ளார். இந்த முடிவுக்கான காரணங்களை விளக்கி விடுத்துள்ள அறிக்கையிலேயே கரு ஜெயசூரிய மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அரசியல் வாழ்வில் நான் வரலாற்று தீர்மானங்கள் பலவற்றை மேற்கொண்டேன். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பயங்கரவாதத்திற்கு எதிராக மேற்கொள்ளும் பிரிவினைவாதத்தை தடுக்க முனையும் முயற்சிக்கு எனது தலைமையிலான ஐ.தே.க.வின் 17 எம்.பி.க்கள் அரசாங்கத்திற்கு ஆரதவு வழங்கத் தீர்மானித்தோம்.

இதன்போது எனக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டது. அப்பதவிக்கான கடமைகளை எந்த விதமான குறைவுமின்றி மக்களுக்காக மேற்கொண்டேன். அரச சேவையில் புதியதொரு பரிமாணத்தை ஏற்படுத்தினேன். அரசுடன் இணைந்து இரண்டு வருட காலம் முடிவடைய இருக்கும் காலகட்டத்தில் எனது இம்முடிவு எடுக்கப்பட்டது.

பிரிவினைவாத பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை அரசாங்கம் சரியான முறையில் முன்னெடுக்கின்றது. அதனை ஆமோதிப்பதற்கு என்னால் முடியும். ஆனால், பொருளாதார நெருக்கடி தொடர்பான அரசாங்கத்தின் நிர்வாகச் செயற்பாடுகளை, கொள்கைகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

பொருளாதார நெருக்கடி எதிர்காலத்தில் முழு நாட்டையும் மக்களையும் அதள பாதாளத்தில் தள்ளிவிடும்.

அத்தோடு, அரசியல் மயத்துக்கு அப்பாற்பட்ட 17 ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டு வரும்போது நானும் ஆதரவளித்தேன். ஆனால், அதனை செயல்படுத்தி நல்லாட்சியை முன்னெடுப்பதற்கு எந்தவிதமான திட்டமும் அரசாங்கத்திடம் கிடையாது. எனவே, மக்கள் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கை, நாடு என்பவற்றை எண்ணி இத் தீர்மானத்தை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன்.

நான் ஒருபோதும் ஐ.தே.க.வை விட்டுச் சென்றதில்லை. கட்சித் தலைமையை விமர்சிக்கவும் இல்லை. எனவே, ஐ.தே.க. தலைவரின் அழைப்பை ஏற்று மீண்டும் கட்சியுடன் இணையத் தீர்மானித்ததோடு, அமைச்சுப் பதவியிலிருந்தும், அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவிலிருந்தும் வெளியேறுகிறேன்.

மீண்டும் ஐ.தே.க. பிரதித் தலைவர் பதவியை ஏற்று நாட்டில் பொருளாதார சுபீட்சத்தை ஏற்படுத்த பாடுபடுவேன். இவ்வாறு கரு கூறினார்.

அதேவேளை கரு ஜயசூரிய மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பொறுப்பை ஏற்று, கட்சியில் இணைந்து கொண்டதனை முன்னிட்டு விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று நடைபெறவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று முற்பகல் 11.00 மணியளவில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

கருத்துகள் இல்லை: