வியாழன், 4 டிசம்பர், 2008

பிரதமரை சந்தித்தது தமிழக அனைத்துக் கட்சிக்குழு: பிரணாப்பை இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு முடிவு




முதல்வர் கருணாநிதி தலைமையில் டெல்லி சென்றுள்ள தமிழக அனைத்துக் கட்சி தலைவர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை காலை 10.15 மணிக்கு, அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்கள்.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய, அந்நாட்டை இந்தியா நிர்ப்பந்திக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் குழு வலியுறுத்தியது.

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த, தமிழக அரசு பல்வேறு வழிகளில் போராடி வருகிறது. இதில் ஒரு பகுதியாக முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் நேற்று டெல்லி சென்றனர்.


தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் சுதர்சனம், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, இலட்சியத் திராவிட முன்னேற்ற கழக தலைவர் டி.ராஜேந்தர், அகில இந்திய சமத்துவ மக்கள் கழகத்தின் சார்பாக ராதிகா சரத்குமார், எம்.ஜி.ஆர்.கழகம் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், ஜனநாயக முன்னேற்ற கழக தலைவர் ஜெகத்ரட்சகன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்த குழுவினர் பிரதமரை அவரது இல்லத்தில் இன்று காலை சந்தித்து பேசினர். அப்போது இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய அந்நாட்டை நிர்ப்பந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து இதே கருத்தை தமிழக அனைத்துக் கட்சித் தலைவர்கள் குழு வலியுறுத்த உள்ளது.

பிரணாப்பை இலங்கை அனுப்ப மத்திய அரசு முடிவு

இலங்கையில் போரை நிறுத்துமாறு அந்நாட்டு அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் முதல்வர் கருணாநிதி தலைமையில் பிரதமரை வலியுறுத்தியது.

மேலும் தமிழகத்திலிருந்து அனுப்பப்படும் இலங்கை தமிழர்களுக்கான நிவாரண பொருட்கள், இலங்கை தமிழர்களுக்கு உரிய முறையில் கிடைக்க புது முயற்சிகளை எடுக்கவும் பிரதமரிடம் வலியுறுத்தினர்.

இதையடுத்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை சென்று, அந்நாட்டு தலைவர்களுடன் பேச்சவார்த்தை நடத்துவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

.

கருத்துகள் இல்லை: