புதன், 10 டிசம்பர், 2008

சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சிக்குள் முரண்பாடு


[செவ்வாய்க்கிழமை, 09 டிசெம்பர் 2008, 02:34 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]
சிறிலங்காவின் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி வந்த அமைச்சர் கரு ஜெயசூரியவுக்கு பிரதித் தலைவர் பதவி வழங்கியமையால் அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சிக்குள் முரண்பாடுகள் எழுந்துள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் நீண்டகால உறுப்பினராக கரு ஜெயசூரிய இருந்தாலும் இடைநடுவில் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு தாவிச்சென்று அமைச்சுப் பதவியையும் ஏற்று ஆதரவு வழங்கி வந்தார்.

இதனால் கரு ஜெயசூரியவை ஐக்கிய தேசியக் கட்சியின் நிறைவேற்றுக் குழு கட்சியின் பிரதித் தலைவர் பதவியிலிருந்து கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் நீக்கியிருந்தது.

இந்நிலையில் மீண்டும் கட்சியில் இணைந்துள்ள கரு ஜெயசூரியவுக்கு பிரதித் தலைவர் பதவி வழங்கப்பட்டது எதற்காக என்று கட்சியின் மூத்த மற்றும் இளம் உறுப்பினர்கள் சிலர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்விகளைத் தொடுத்துள்ளனர்.

கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி.திசநாயக்கவை பிரதித் தலைவராக நியமிக்குமாறு ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகின்றது.

கட்சி தலைமையகமான சிறிக்கொத்தாவில் இன்று செவ்வாய்க்கிழமை உறுப்பினர்கள் சிலர் தமக்கிடையே வாக்குவாதப்பட்டதாகவும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக குரல் எழுப்பியதாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கரு ஜெயசூரிய இதுவரை பிரதித்தலைவர் பதவியை ஏற்கவில்லை எனவும் அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவது தொடர்பாக ஊடகங்களுக்கு இதுவரை அவர் எதுவும் தெரிவிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுக்கின்றது.

கருத்துகள் இல்லை: