வியாழன், 18 டிசம்பர், 2008

படையினர் 170 பேர் பலி, 400 பேர் காயம், 36 உடலங்கள் விடுதலைப் புலிகளால் மீட்பு - AP


வன்னியில் ஒரு நாள் இடம்பெற்ற மோதலில் மட்டும் சிறீலங்கா படையினர் 170 பேர் பலியானதுடன்,400 பேர் வரையில் காயமடைந்திருப்பதாகவும்,36 உடலங்கள் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டுள்ளதாகவும் AP (Associated Press) செய்திச் சேவை அறிவித்துள்ளது.

AP யின் செய்தியை மேற்குலகின் பல ஊடகங்கள் இன்று காலை முதல் வெளியிட்டு வருவதால், சிறீலங்கா அரசின் பரப்புரையில் பாரிய இடி விழுந்துள்ளதாக வர்ணிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி களமுனையில் மட்டும் 130 படையினர் கொல்லப்பட்டிருப்பதாக விடுதலைப் புலிகள் தகவல் வெளியிட்டிருந்தனர். இதற்கு முன்னர் கிளாலியில் 40 படையினர் கொல்லப்பட்டிருந்தனர். இந்த இரு இடங்களிலும் முறையே 300 மற்றும் 120 வரையிலான படையினர் காயமடைந்திருந்தனர்.

படையினர் கூறும் தகவல்களை வழமையாக முதலில் வெளியிட்டுவரும் மேற்குலக ஊடகங்கள் இம்முறை விடுதலைப் புலிகள் தரப்பு செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு, அதன் பின்னர் அரச தரப்பு கூறும் தகவல்களை வெளியிட்டு வருகின்றன.

கிளிநொச்சி மோதலில் விடுதலைப் புலிகள் தரப்பில் 120 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், தமது தரப்பில் 25 படையினர் பலியாகி இருப்பதாகவும் அரச தரப்பினர் நேற்று அறிவித்திருந்தனர்.

விடுதலைப் புலிகள் 10 உடலங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகக் கூறப்பட்ட பின்னர் மேலும் 10 படையினர் காணாமல் போயிருப்பதாகவும் படைத்தரப்பு கூறியது.

படையினரது 10 உடலங்கள் முன்னரும், பின்னர் 8 உடலங்களும், அதனைத் தொடர்ந்து இன்று புதன்கிழமை காலை 10 உடலங்களுமாக மொத்தம் 28 உடலங்கள் கிளிநொச்சியில் மட்டும் கைப்பற்றப்பட்டிருப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தமது தரப்பில் கொல்லப்பட்ட படையினரது எண்ணிக்கை 5 முதல் 10 ஆக அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக, சிறீலங்கா படைத்துறைப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளால் 36 உடலங்கள் கைப்பற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், தமது இழப்பு எண்ணிக்கையை அதிகரிக்கும் நிலைக்கு படையினர் தள்ளப்பட்டுள்ளனர்.

வழமையாக விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட உடலங்களின் எண்ணிக்கையை வைத்து, தமது இழப்பு விபரத்தை படையினர் வெளியிட்டு வந்த நிலையில், விடுதலைப் புலிகள் தாம் கைப்பற்றிய உடலங்கள் பற்றிய விபரங்களை மூன்று தடவைகள் வெளியிட்டதன்மூலம் படையினரது மூடிமறைப்பு விளையாட்டிற்கு விடுதலைப் புலிகள் ஆப்பு வைத்துள்ளனர்.

இதேவேளை, AFP, BBC, CNN, அல்ஜசீரா, போன்ற ஊடகங்கள் கிளாலி இழப்பினைத் தவிர்த்து, கிளிநொச்சியில் 140 படையினர் கொல்லப்பட்டதையும், 300 வரையிலான படையினர் காயமடைந்திருப்பதையும் செய்தியாக வெளியிட்டிருப்பதுடன், இதேபோன்று உலகின் முன்னனணி ஊடகங்கள் அனைத்தும் செய்தி வெளியிட்டு வருகின்றன.

1 கருத்து:

தமிழ் மதுரம் சொன்னது…

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். தொடருங்கள்.