திங்கள், 1 டிசம்பர், 2008

இலங்கைக்குப் போனது ஆயுதம்! மும்பையில் போனது மானம்!

மும்பையில் தீவிரவாதிகள் மூன்று நாட்களாக நடத்திய தாக்குதலில் நிலைகுலைந்து கிடக்கிறது, மத்திய அரசு! பாகிஸ்தானில் இருந்து கப்பலில் வர்த்தக நகரமான மும்பையில் வந்திறங்கி இந்தியா மீது கிட்டத்தட்ட போர்த் தொடுத்திருக்கிறார்கள். பாகிஸ்தானின் பயிற்சிப் பெற்ற தீவிரவாதிகள் இவர்கள் என்று வழக்கம்போல் மத்திய அரசு சொல்லிவிட்டது.

அமெரிக்காவில் செப்டம்பர் 11 நடந்த இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின் அதற்குக் காரணமாகச் சொல்லப்பட்ட ஒசாமாபின் லேடனைக் கொல்வதற்காக ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய உக்கிரத் தாக்குதலை யாரும் மறந்திருக்க முடியாது. அதற்கு உலக நாடுகள் மத்தியில் பல எதிர்ப்புகள் கிளம்பிய போதும் தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்று கிளம்பியது, அமெரிக்கா. இந்தியாவும் வல்லரசு ஆகும் என்று தனியார் பள்ளி, கல்லூரி விழாக்களில் பேசும் அப்துல் கலாம், இந்தியாவையும் அமெரிக்காவைப் போல் தீவிரவாதத்துக்கு எதிரான போரை நடத்தச் சொல்லலாமே?

பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் இங்கெங்கு உள்ளன? என்று இந்திய உளவுத் துறைக்குத் தெரியவில்லை என்றால், அதைவிடக் கேவலம் வேறு எதுவும் இருக்க முடியாது. அந்தத் தீவிரவாத முகாம்களில் இருந்துதான் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைகிறார்கள் என்கிறது, மத்திய அரசு. அப்படியென்றால், அந்த முகாம்களை ஏன் தாக்கக் கூடாது. தமிழர்களை அழிக்க சிங்கள அரசுக்கு ஆயுதம் கொடுக்கும் மத்திய அரசு, இந்தியனை அழிக்கும் தீவிரவாதிகளை இதுவரையிலும் எதுவும் செய்ததில்லையே ஏன்?

காங்கிரஸ்காரர்கள் அதிலும் தமிழக காங்கிரஸ்காரர்கள் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைக் கைது செய்ய வேண்டும் என்று கத்திக் கொண்டேதான் இருக்கிறார்கள். ராஜிவ்காந்தியைக் கொன்றவர் பிரபாகரனாம். சரி, ஆயிரக்கணக்கான இந்தியர்களை கொன்று குவித்த தாவூத் இப்ராஹிம் பதுங்கியிருப்பது பாகிஸ்தானில் தானே? புலிகளை அழிக்க சிங்கள அரசிற்கு ஆயுதம் தருகிறோம் என்கிறார்கள் இந்தக் காங்கிரஸ்காரர்கள். பிரபாகரனைப் பிடித்தால் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டுமாம. அப்படியென்றால், தாவூத் இப்ராஹிமைப் பிடிக்க யாருக்கு ஆயுதம் தரப்போகிறார்கள். பாராளுமன்றத்திலும் தாஜ் ஹோட்டலிலும் நடந்த தாக்குதலில் உயிரிழந்த நம் வீரர்கள், அப்பாவி மக்கள் ஆகியோரின் சார்பில் கேட்கப்படும் இந்தக் கேள்விக்கு காங்கிரஸ் அரசிடம் ஏதாவது பதிலிருக்குமா?

வழக்கம் போல் அத்வானி போன்ற பா.ஜ.க.வினர் பொடா சட்டம் இருந்திருந்தால் இப்படியொரு சம்பவம் நடந்திருக்காது என்று சொல்வார்கள். இந்தியாவில் பொடா சட்டம் இருந்தால் பாகிஸ்தானில் இருந்து அந்தக் கப்பல் கிளம்பியிருக்காது என்று இல.கணேசன் கூட இங்கு பிரஸ் மீட் கொடுப்பார்கள். இதே பா.ஜ.க., ஆட்சியில் அதுவும் பொடா சட்டம் அமலில் இருந்த சமயத்தில் பாராளுமன்றத்தின் மீதே தாக்குதல் நடத்தினார்கள். இப்படியே பொடா சட்டத்தில் யார், யார்யெல்லாம் கைது செய்யப்பட்டார்கள்? வைகோவையும் பழ.நெடுமாறனையும் தான் என்பதை யாரும் மறந்திருக்க முடியாது. பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிரான கார்கில் போரில் பெற்ற வெற்றியை கொண்டாடிக் கொண்டே இந்தியா மீது புனிதப் போர் நடக்கிறது என்று சொன்ன பர்வேஸ் முஸாரஃபை அழைத்து வந்து விருந்து வைத்தவர்களும், இதே பா.ஜ.க.,தான். முகமது அலி ஜின்னாவை இந்தியாவில் துரோகி என்கிற அத்வானி, பாகிஸ்தான் போனால் தியாகி என்பார்.

இந்தியாவில் எங்கு குண்டு வெடித்தாலும் அதற்குக் காரணம் என்று இஸ்லாம் சகோதரர்கள் மீது பலிபோடுவது வி.எச்.பி.,யின் அணுகுமுறை. ஆனால் மலேகான் குண்டு வெடிப்புக்குக் காரணமான இந்துத் தீவிரவாதிகள் (முஸ்லிம் தீவிரவாதி இருக்கும் போது, இந்துத் தீவிரவாதி இருக்கக் கூடாதா?) மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்கிறார்கள். ஏன் பொடா சட்டம் எல்லாம் இஸ்லாம் சகோதரர்கள் மீது மட்டும்தான் பாயுமா?

இன்னொரு முக்கியமான விடயம் என்னவென்றால், செப்டம்பர் 11 நடந்த இரட்டை கோபுரம் தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தாலும், ஒரே ஒரு சடலத்தைக் கூட, ஒரே ஒரு சொட்டு ரத்தத்தைக் கூட காட்டவில்லை அங்குள்ள மீடியா. ஆனால் தாஜ், ஒபாரே, நாரிமன் இல்லம் ஆகிய இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை ரியலிட்டி ஷோ ரேஞ்ஜிற்கு லைவ்வாக ஒளிபரப்பி, புண்ணியத்தைக் கட்டிக் கொண்டார்கள். தீவிரவாதிகளும் வெளிநாட்டுப் பயணிகளை பிணயக் கைதிகளாகப் பிடித்து வைத்து நம் உளவுத் துறையின் கையாலாகத்தனத்தை உலகிற்கே பறைசாற்றி விட்டனர்.

ஆக மொத்தத்தில் இந்தியாவின் பிரதான இரண்டு கட்சிகளான காங்கிரஸ�ம் சரி, பா.ஜ.க.,வும் சரி இந்தப் பிரச்னையை கையாளத் தெரியாமல் திணறுகிறது. அதற்குக் காரணம் காஷ்மீர் மக்களின் விருப்பத்துக்கு எதிராக தொடர்ந்து இந்திய அரசு தாங்கிப்பிடிக்கும் அவர்கள் கடைபிடித்து வரும் போக்குதான்.
இலங்கையில் ஈழத் தமிழர்களின் விருப்பத்துக்கு எதிராக சிங்கள அரசின் செயல்பாட்டிற்கு இந்திய அரசு ஆதரவு கொடுத்து வருவதும் இதே சிக்கலைத் தான் ஏற்படுத்தி வருகிறது. இலங்கைக்கு ஆயுதம் தருகிறீர்கள்? மும்பை வரை வந்து தாக்கும் தீவிரவாதிகளிடம் உயிரைவிடுகிறீர்கள். ஆசிய கண்டத்தில் ஆதிக்கச் சக்தியாக உருவெடுக்கவே இலங்கைக்கு ஆயுதம் தருகிறோம் என்று மத்திய அரசு சொன்னதாக ஞாபகம். உங்கள் ஆதிக்கச் சக்தியைப் பார்க்கும் போது ஒவ்வொரு இந்தியனுக்கும் புல்லரிக்கிறது!

நன்றி : பதிவு

கருத்துகள் இல்லை: