வியாழன், 4 டிசம்பர், 2008

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின்போது 12 ஆயிரம் படையினர் பலியாகியுள்ளனர்: ஐக்கிய தேசியக் கட்சி



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மூன்று வருட ஆட்சியில் மாத்திரம் யுத்தத்தினால் 12 ஆயிரம் படையினர் கொல்லப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:-

அத்துடன் யுத்தத்தில் 12 ஆயிரத்திற்கும் அதிகமான படையினர் வலுவிழந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தில் உயிரிழந்த படையினர் 19 வயதுக்கும் 27 வயதுக்கும் உட்பட்டவர்கள். இவர்களில் எட்டாயிரம் பேர் வரை திருமணம் செய்தவர்கள்.

எனவே இவர்கள் உயிரிழந்தமையை அடுத்து இவர்களின் மனைவியர் அனைவரும் விதவைகளாகியுள்ளதாக பாலித ரங்கே பண்டார குறிப்பிட்டுள்ளார். இவர்கள் மீண்டும் திருமணம் செய்தால் அவர்களுக்கு தமது கணவன்மார்களுக்காக கிடைக்கும் இழப்பீட்டுத் தொகை கிடைக்காமல் போய் விடும். அதேநேரம் கணவன் இல்லாத நிலையில் இவர்கள் குழந்தைகளைப் பெற்றால் சமூகம் இவர்களை வித்தியாசமாக நோக்கும் என்றும் பாலித ரங்கே பண்டார குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருடம் கிழக்கு மாகாணத்தில் மாவீரர் தின நிகழ்வுகள் நடைபெறவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. எனினும் கேணல் ராமின் தலைமையிலும் ஏனைய தளபதிகளின் தலைமையிலும் அம்பாறை, மட்டக்களப்பு உட்பட்ட பகுதிகளில் 6 மாவீரர் தின நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வன்னியில் ஒவ்வொரு நாளும் விமானத் தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அங்கும் 13 இடங்களில் மாவீரர் தின நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம், இழப்புகளை குறைத்து யுத்தத்தில் வெற்றி பெறுவதை விட இழப்புகளை அதிகமாக்கி நிலங்களை கைப்பற்றுவதில் பயன் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் இந்த வருட மாவீரர் நாள் உரையில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியின்போதே தமது வலுவைக் குறைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது என பாலித ரங்கே பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: