திங்கள், 8 டிசம்பர், 2008

பிரணாப் முகர்ஜி வருமுன் இராணுவ வெற்றி ஒன்றை பெறுவதில் இலங்கை அரசு முனைப்பு



புதுடில்லியின் அழுத்தம் காரணமாக இனப்பிரச்சினை தீர்வுக்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டுள்ள இலங்கை அரசாங்கம் அதற்கு முன்னர், ஏதாவது ஒரு இராணுவ வெற்றியை பெற்றுவிடவேண்டும் என்ற முனைப்பை மேற்கொண்டு வருவதாக “தெ நேசன்” செய்திதாள் தமது அரசியல் கட்டுரையில் தெரிவித்துள்ளது.

பௌத்த பிக்குகளின் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவும், விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணியும் இந்திய அழுத்தத்தை அடுத்து, யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு இணங்கி வந்துள்ள நிலையில் இந்த முனைப்பை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

தமிழக முதல்வர் கருணாநிதி கடந்த வாரம் புதுடில்லிக்கு சென்று திரும்பிய பின்னர், இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு வருவார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியா அழுத்தம் கொடுக்கும் ஒரு முக்கிய முயற்சியாகவே கருதப்படுகிறது.

இதேவேளை நடைமுறை யுத்தமானது, இலங்கை ஜனாதிபதிக்கு மக்கள் மத்தியில் முழுமையான ஆதரவை பெற்றுக்கொடுத்துள்ளமையால் அந்த யுத்தத்தை உடனடியாக நிறுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் உடன்பட வாய்ப்பில்லை. இதனை இந்திய அரசாங்கமும்; உணர்ந்துள்ளது.

எனவே நிலைமைகளை சமாளிக்கும் வகையில் ஏதாவது ஒரு இராணுவ வெற்றியை பெறுவதில் இலங்கை அரசாங்கம் முயன்று வருகிறது. இதன் காரணமாக கடந்தவாரம் முதல் வன்னியில் இராணுவ முனைப்புகளை அது அதிகரித்துள்ளதாக “ தெ நேசன்” தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை: