புதன், 17 டிசம்பர், 2008

கிளிநொச்சி நோக்கிய பாரிய நான்கு முனை நகர்வு முறியடிப்பு - 140 படையினர் பலி, 370 பேர் படுகாயம்;, 32 உடலங்கள் உட்பட ஆயுதங்கள் புலிகள் வசம்

கிளிநொச்சியை ஆக்கிரமிக்கும் நோக்குடன் சிறிலங்கா மேற்கொண்ட இன்னொரு முயற்சியும் விடுதலைப் புலிகளால் இன்று முறியடிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் முன்னேற முனைந்து ஏராளமான படையினரைப் பறிகொடுத்து பெரும் இழப்புக்களைச் சந்தித்த சிறிலங்கா, இன்று கிளிநொச்சி நோக்கி நான்கு முனைகளின் ஊடாக மேற்கொண்ட முன்நகர்வும் கிளாலியில் இருந்து மேற்கொண்ட முன்நகர்வும் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 140ற்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 370ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். 18 உடலங்களும், பெருமளவு ஆயுத தளவாடங்களும் புலிகள் வசமாகியுள்ளன.

இராணுவத்தினர் முன்னேற முனைந்த பகுதிகளில் புதன்கிமை காலை விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது மேலும் ஆறு உடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது, குஞ்சுப்பரந்தனில் இருந்து கிளிநொச்சி நோக்கியும் முறிகண்டியில் இருந்து இரணைமடு நோக்கியும் புலிக்குளத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கியும் மலையாளபுரத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கியுமாக நான்கு முனைகளில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.00 மணியளவில் சிறிலங்கா படையினர் முன்நகர்வுகளை மேற்கொண்டனர்.

செறிவான பல்குழல் வெடிகணை, ஆட்லெறி எறிகணை மற்றும் கனரக போர்க்கலங்களின் சூட்டாதரவுடன் முன்நகர்வுகளை மேற்கொண்ட சிறிலங்கா படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர எதிர்த்தாக்குதலை நடத்தி முன்நகர்வுகளை முறியடித்தனர். இதில் 100-க்கும் அதிகமான சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டனர். 250-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். படையினரின் 10 உடலங்கள் உட்பட பெருமளவிலான ஆயுத தளவாடங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக என்று விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் தெரிவித்துள்ளனர். இதன்போது 2 ஏ.கே.எல்.எம்.ஜி ரக துப்பாக்கிகளும், ஒரு பி.கே.எல்.எம்.ஜி ரக துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ள ஆயுத தளவாடங்கள் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று கிளாலியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட முன்நகர்வினை முறியடித்த விடுதலைப் புலிகள் 40ற்கும் அதிகமான சிறிலங்கா படையினர் கொன்று 120க்கும் அதிகமானோரை காயப்படுத்தி படையினரின் 8 உடலங்கள் உட்பட படையப் பொருட்களை கைப்பற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று அதிகாலை 1.30 மணியளவில் ஆரம்பித்த முன்னகர்வு முயற்சி காலை 10.30 மணிவரை சுமார் ஒன்பது மணிநேரங்கள் கிளாலியில் நீடித்ததாக விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா படைகளின் 53வது டிவிசன் கொமாண்டோ படையணியின் எயார் மொபைல் பிரிகேட் கொமாண்டோ படையணியே முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்ட போதிலும், தமிழீழ விடுதலைப் புலிகளின் கடுமையான தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாது பின்வாங்கியுள்ளது.

முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்ட படையினருக்கு பின்தள பீரங்கி, பல்குழல் சூட்டாதரவு வழங்கப்பட்டதுடன், டாங்கிகளும் முன்னேறும் படையினருடன் களமிறக்கப்பட்டிருந்தன.

இந்த முன்னகர்வு முறியடிப்பின்போது சிறீலங்கா படையினரின் சடலங்கள் உட்பட பெருமளவு ஆயுதங்களும் மீட்கப்பட்டிருப்பதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

யாழ். குடாநாட்டில் அடுத்து வரும் சில தினங்களில் விடுதலைப் புலிகளின் வசமுள்ள முகமாலை மற்றும் கிளாலி முன்னரங்க பாதுகாப்பு நிலைகளை இராணுவத்தினர் கைப்பற்றி விடுவார்களென யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் டி.ஏ.சந்திரசிறி தெரிவித்திருந்த நிலையில் இன்று இந்த தாக்குதல் தொடங்கப்பட்டிருந்தது.

யாழ்ப்பாண இராணுவ தலைமையகத்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனக் கூறியிருந்தார்.

கருத்துகள் இல்லை: