வியாழன், 11 டிசம்பர், 2008

மனித உரிமைகளுக்கு அடிப்படையானது சுயநிர்ணய உரிமையே அதற்காகவே நாம் போராடுகின்றோம் - பா.நடேசன்


மனித உரிமைகளுக்கு அடிப்படையானது சுயநிர்ணய உரிமையே, அதற்காகவே நாம் போராடுகின்றோம். இது பயங்கரவாதம் அல்ல என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்று புதுக்குடியிருப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் பேசும் போது இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் பேசுகையில் கூறியதாவது: எமது தேசத்தில் இவ்வாறான சூழலில் அனைத்துலக மனித உரிமைகள் நாள் போன்ற நிகழ்வுகளைக் கொண்டாடி அதை நினைவூட்டுவதில் நாம் பெருமையும் மகிழ்ச்சியும் அடையவேண்டும்.

இன்றைய இந்த அனைத்துலக மனித உரிமைகள் தினமானது, எல்லா நாடுகளிலும் எல்லா மனித உரிமை அமைப்புக்களாலும், அரச அமைப்புக்கள் பல்வேறுபட்ட துறைசார்ந்த நிறுவனங்கள் என பல்வேறு கட்டமைப்புக்களும் இந்த நிகழ்வைக் கொண்டாடிக் கொண்டு இருக்கின்றன. ஆனால், மனித உரிமை தினமான இன்றைய நாளை உரிமையோடு கொண்டாடக் கூடிய உரிமை எங்களைப் போன்ற மனித உரிமைகளுக்காகப் போராடுகின்ற ஒரு தேசிய இனத்திற்கே மிகவும் அதிக அளவில் இருக்கின்றது.

இந்த மனித உரிமையானது எல்லோருக்கும் சமமாக இருந்தாலும், மனித உரிமைகள் மறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் மக்களாகிய நாங்கள் இதனைக் கொண்டாடுவதில் பெருமைப்பட வேண்டும். தமிழீழத்தைப் பொறுத்தமட்டில் எங்களது மக்களைப் பொறுத்தமட்டில் நாங்கள் பல வருடங்களாக இந்த மனித உரிமைகளுக்காகத் தொடர்ச்சியாகப் போராடிக் கொண்டு வருகின்றோம்.

இன்று ஐம்பது வருடங்களுக்கு முன்னரல்ல, அதற்கு முன்னரே எங்களுடைய இனம் மனித உரிமைகளுக்காகப் போராடத் தொடங்கிவிட்டது. 1948ஆம் ஆண்டு பிரித்தானிய அரசிடம் இருந்து சிங்கள அரச தலைவர்களுக்கு அதிகாரம் கைமாற்றப்பட்ட அன்றிலிருந்தும் ஏன் அதற்கு முன்னரே எமது இனத்தினுடைய உரிமைகள் பறிக்கப்படத் தொடங்கி விட்டன.

எங்கெல்லாம் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் இல்லையோ அங்கெல்லாம் மனித உரிமைகள் மீறப்படுகின்றது என்பதுதான் அர்த்தம். இந்த உலகத்தில் ஏற்றத்தாழ்வுகளும் முரண்பாடுகளும் எப்போது தோற்றம் பெற்றனவோ அன்றே இந்த மனித உரிமைகள் மீறப்பட ஆரம்பித்து விட்டன. எங்களுடைய மக்களின் ஒட்டுமொத்தமான மனித உரிமைகளை மீளப்பெறுவதற்காக மட்டுமல்ல.

எங்களுடைய தேசத்தில் சகல மக்களும் சுதந்திரமாக, சமத்துவமாக, சகோதரத்துவமாக வாழ்வதற்கான ஒரு விடுதலைப் போராட்டமாக எங்களுடைய மனித உரிமைகளுக்கான போராட்டம் இன்று பெரிய வளர்ச்சி நிலையை அடைந்திருக்கின்றது என இன்றைய அனைத்துலக மனித உரிமைகள் நாளில் நாம் பெருமையுடன் கூறிக்கொள்ளலாம்

கருத்துகள் இல்லை: