திங்கள், 22 டிசம்பர், 2008

வறிய சிங்கள இளைஞர்களை ஏமாற்றி படைக்கு ஆட்சேர்ப்பு - புலிகளால் மீட்கப்பட்ட சிப்பாய் தெரிவிப்பு



சிறிலங்கா படைத்தரப்பு வறிய சிங்கள இளைஞர்களை ஏமாற்றி படைக்கு ஆட்சேர்ப்புச் செய்வதாக விடுதலைப் புலிகளிடம் உயிருடன் பிடிபட்டுள்ள சிங்கள இராணுவச் சிப்பாய் தெரிவித்துள்ளார். கடந்த 13ம் திகதி விடுதலைப் புலிகளின் தாக்குதலில் காயமடைந்த நிலையில் பிடிபட்ட நிசாங்க றணசிங்க வயது 22 என்ற இந்த இராணுவச் சிப்பாயே இதனைத் தெரிவித்தார்.

இவர் கிளிநொச்சி பொதுமருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று மாலை ஊடகவியலாளர்கள் அவரைச் சந்தித்து உரையாடினர். தனது சொந்த ஊர் அனுராதபுர மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணேவ எனவும் 7ம் ஆண்டுவரை கல்வி கற்றதாகவும் தான் சிங்கறெஜிமென் 53வது படைப்பிரிவைச் சேர்ந்தவரென்றும் கடந்த ஜீலை மாதம் படையில் சேர்க்கப்பட்டபோது தான் சண்டைக்கு அனுப்பப்படமாட்டேன் எனவும் இராணுவம் பிடித்த இடத்தில் இருந்து கடமைபுரிவதுதான் வேலை எனவும் தனக்கு வாக்குறுதியளிக்கப்பட்டதாகவும் கூறினார்.

ஆனால் டிசெம்பர் 9 ஆம் திகதி முகமாலைக்கு கொண்டுவரப்பட்டு சண்டையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் டிசெம்பர் 13 ஆம் திகதி காயமடைந்தபோது தன்னோடு நின்ற சிப்பாய்கள் தன்னைக் கைவிட்டுவிட்டு ஓடிவிட்டதாகவும் 13 மணிநேரம் அதே இடத்தில் கிடந்த நிலையில் மூன்று விடுதலைப் புலிகள் வந்து தன்னை மீட்டதாகவும் கூறினார்.

வறுமை காரணமாகவே தான் படையில் சேர்ந்ததாகவும் ஆனால் படைத்தரப்பு அளித்த வாக்குறுதியை மீறி தன்னைச் சண்டையில் ஈடுபடுத்தியதாகவும் அவர் மேலும் கூறினார். படையில் சேர்க்கப்பட்ட தன்னைப் போன்ற இளைஞர்கள் இதனை உணர்ந்துகொள்ள வேண்டுமெனவும் இனிமேல் படைத்தரப்பின் இவ்வாறான வாக்குறுதிகளை நம்பி படையில் சேரக்கூடாதெனவும் அவர் தெரிவித்தார்.

கிளிநொச்சி நகரிலுள்ள பொது மருத்துவமனையில் இவருக்கு சிகிச்சைசயளிக்கப்பட்டுக் கொண்டிருந்து வேளையிலும் அதனை அண்டிய பிரதேசங்களில் விமானத் தாக்குதல்களும், எறிகணைத் தாக்குதல்கள் கிளிநொச்சி மருத்துவமனைக் கட்டிடங்கள் அதிர்ந்தவண்ணம் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: