புதன், 15 அக்டோபர், 2008

அரசியலுக்கு வருமாறு என்னை கட்டாயப்படுத்தவும் முடியாது அப்படி வந்தாலும் எவரும் என்னை தடுக்கவும் முடியாது - ரஜினிகாந்த் அறிவிப்பு


வீரகேசரி நாளேடு 10/14/2008 8:29:59 PM - அரசியலுக்கு வருமாறு என்னை எவரும் கட்டாயப்படுத்தவும் முடியாது. அப்படி வந்தால் என்னை எவரும் தடுக்கவும் முடியாது என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். மேலும், அவருடைய பெயரில் கட்சி தொடங்குபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அண்டைய மாநிலத்திலும், தமிழ்நாட்டிலும் நடிகர்களின் அரசியல் பிரவேசத்தினால், நானும் தமிழக அரசியலில் நேரடியாக ஈடுபட வேண்டும் என்ற எனது ரசிகர்களின் ஆர்வம் எனக்கு நன்றாகப் புரிகிறது. அரசியல் ஆர்வமுள்ள எனது ரசிகர்கள் தத்தமது விருப்பப்படி கட்சிகளில் இணைந்து கொள்ளலாம்.

ஆனால் எனது பெயரில் ஒரு கட்சி, அதற்கென ஒரு கொடியை அறிமுகப்படுத்துதல், என் படத்தை பயன்படுத்துதல் போன்ற செயல்களில் ரசிகர்களோ, மற்றவர்களோ ஈடுபடுவதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்.

இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுபவர்களை, அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்க தக்க நடவடிக்கை எடுப்பேன். நீக்கிய பின்பும் இத்தகைய நடவடிக்கைகள் தொடருமானால் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் அரசியலுக்கு நான் வந்துதான் ஆகவேண்டும் என்று என்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. அப்படி நான் அரசியலுக்கு வர முடிவெடுத்தால் என்னை யாரும் தடுக்கவும் முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கோவையில் சில தினங்களுக்கு முன்பு ரஜினிகாந்த்தின் பெயரில் கட்சி ஆரம்பித்த ரசிகர்கள், மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை: