வெள்ளி, 17 அக்டோபர், 2008

மருத்துவ செலவுக்காக டைட்டானிக் ஞாபகார்த்த பொருட்கள் ஏலத்தில் விற்பனை


டைட்டானிக் கப்பலில் பயணித்து மீண்ட இறுதி உயிர் வாழும் பெண்மணியான மில்வினா டீன், மேற்படி கப்பல் பயண ஞாபகார்த்தமாக வைத்திருந்த பொருட்களை ஏலத்தில் விட தீர்மானித்துள்ளார். தனது மருத்துவ செலவுக்காகவே அவர் இந் நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது 96 வயதான மில்வினா டீனுக்கு, 1912 ஆம் ஆண்டு டைட்டானிக் கப்பல் வட அத்திலாந்திக் கடலில் மூழ்கிய போது வயது 9 வாரங்கள் மட்டுமே. இந்நிலையில் மேற்படி மூழ்கிய கப்பலிலிருந்து காப்பாற்றப்பட்டு நியூயோர்க்கை வந்தடைந்த பின் அவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட ஒரு பெட்டி நிறைந்த ஆடைகள் உள்ளடங்கலான ஞாபகார்த்த பொருட்களை 3000 ஸ்ரேலிங் பவுனுக்கு விற்க அவர் எதிர்பார்த்துள்ளõர்.

வில்ட்ஷியரில் நடைபெறவுள்ள இந்த ஏல விற்பனையில், டைட்டானிக் நிவாரண நிதிக்காக மில்வினாடீனின் தாயாரால் அனுப்பப்பட்ட நஷ்டஈடு கோரும் கடிதங்களும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். ""நான் என்னுடைய ஞாபகார்த்த பொருட்களை எனது மருத்துவ கட்டணங்களுக்காக விற்கிறேன். தற்போதுள்ள நிலையில் எனக்குத் தேவையான சிறிது பணத்தைப் பெற எதையும் விற்க நான் தயாராக உள்ளேன்'' என்று அவர் கூறினார்.

டைட்டானிக் கப்பல் மூழ்கிய போது, மில்வினா டீனும் அவரது தாயாரும் சகோதரரும் காப்பாற்றப்பட்டனர். ஆனால் அவரது தந்தையான பெர்ட்ரம் இந்த கப்பல் விபத்து அனர்த்தத்தில் பலியானார். டைட்டானிக் கப்பல் விபத்தில் 1,500 பேருக்கும் அதிகமானோர் பலியானமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: