புதன், 15 அக்டோபர், 2008

இலங்கைக்கு கொடுத்த ஆயுதங்களை இந்தியா திரும்பப் பெறவேண்டும்: சென்னையில் தமிழ் தேசிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம்




ஈழத்தில் தமிழர்களை இனப்படுகொலை செய்து வரும் சிங்கள அரசுக்கு இராணுவ உதவிகள் செய்து வரும் இந்திய அரசைக் கண்டித்து சென்னையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தேறியது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஆகிய அமைப்புகள் இவ்வார்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தினர்.

மாலை 4 மணியளவில் தொடங்கிய இவ்வார்ப்பாட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில் சிங்கள அரசுக்கான இந்திய அரசின் உதவிகள் தொடர்ந்து கொண்டே உள்ளன என ஆதாரங்களுடன் விளக்கினார்.

ஆர்ப்பாட்டத்தை தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் தியாகு ஒருங்கிணைத்தார். அவர் பேசுகையில், சிங்கள அரசுக்கு இந்தியா கொடுத்துள்ள இராணுவத் தளபாடங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்கிற கோரிக்கையை முதல் முதலாக முன்வைப்பதாகவும் இக்கோரிக்கையை அனைவரும் உரக்க வலியுறுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்ந்து பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன் பேசும்போது, விடுதலைப் புலிகளுக்கு தமிழகத்தில் பெரும்பான்மையானோர் ஆதரவு தெரிவிப்பதாக வெளிவந்துள்ள கருத்துக்கணிப்புப் பற்றிய தகவலைத் தெரிவித்து, சிங்கள அரசிற்கு உதவும் இந்திய அரசின் பார்ப்பனியச் சார்பு நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தார்.

தமிழ் உணர்வாளரும் தமிழ்த் திரை இயக்குனருமான சீமான் பேசும் போது இந்திய அரசு நாங்கள் கொடுத்த வரிப்பணத்தில் எங்கள் உறவுகளைச் சுட்டுக் கொல்கிறது என்றால், நாங்கள் இனி இந்திய அரசுக்கு வரி கட்டமாட்டோம் என்று கூறினார்.

நிறைவுரையாக இந்திய பொதுவுடைமைக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தோழர் சி.மகேந்திரன் பேசும் பொழுது, இந்திய அரசு சிங்கள அரசுக்கு கண்டனம் கூடத் தெரிவிக்காமல் ஒர் மறைமுக கூட்டாளி போல எம்.கே.நாராயணனை அழைத்து பேச வைத்திருக்கிறதே, இந்த எம்.கே.நாராயணன்? இவர் மக்கள் பிரதிநிதியா? ஓர் அதிகாரிக்கு இவ்வளவு உரிமைகளை யார் கொடுத்தார்? இவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பிரச்சினை எழுப்புவோம் என்று கூறினார்.

இவ்வார்ப்பாட்டத்தில் புலவர் புலமைப்பித்தன், எழுத்தாளர் ஓவியா, பாவலர் தாமரை, விடுதலை சிறுத்தைகள் சோழன் நம்பியார், வழக்கறிஞர்கள் அஜிதா, தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணியின் செயலாளர் எழுத்தாளர் செயப்பிரகாசம், சேசுபாலன்ராஜா, எழுகதிர் இதழ் ஆசிரியர் அரு.கோபாலன் மற்றும் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் தமிழக மீனவர்கள் வலைகளுடன் குண்டு காயம் பட்டது போன்ற காட்சியை அமைத்து காண்போர் கவனத்தை ஈர்த்தனர். ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100 பேர் கலந்து கொண்டு இந்திய சிங்கள அரசுக்கு எதிராகவும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும் முழக்கங்களை எழுப்பினர்.

கருத்துகள் இல்லை: