புதன், 15 அக்டோபர், 2008

சிங்கள அதிகாரிகள், சிங்கள இராணுவத்திடமிருந்து தமிழர்களை மீட்கவே அனைத்து கட்சிக்கூட்டம்: தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி



இலங்கைத் தமிழர்களை மீட்டு எடுக்கக்கூடிய, அவர்களின் இனத்தை இன்றைக்கு நாசப்படுத்துகின்ற சிங்கள அதிகாரிகள், சிங்கள இராணுவத்திடமிருந்து அவர்களை மீட்டெடுக்க அனைத்து கட்சித் தலைவர்களின் கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாக தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4:30 நிமிடமளவில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அனைத்து கட்சிக்கூட்டத்தினைத் தொடங்கி வைத்து தமிழக முதலமைச்சர் கலைஞர் ஆற்றிய உரை:

அனைத்து கட்சிக்கூட்டத்திற்கு நான் விடுத்த வேண்டுகோள் அழைப்பிற்கிணங்க வருகை தந்துள்ள கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தக் கூட்டம் ஒருவருக்கொருவர் நன்றி தெரிவித்துக்கொள்வதற்காகக் கூட அல்ல.



எல்லோரும் சேர்ந்து எடுக்க இருக்கின்ற, எடுப்பதற்காக முடிவு செய்து அறிவிக்கின்ற ஒரு செயலை எப்படி நிறைவேற்றுவது என்பதைப் பற்றி முடிவெடுப்பதற்காகக் கூட்டப்பட்டுள்ள கூட்டம் என்றே நான் கருதுகின்றேன்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அமைக்கப்பட்ட உண்ணா நோன்பில் பல கட்சிகளையும் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை இலங்கையில் நடைபெறுகின்ற இனப்படுகொலையைக் கண்டிக்கின்ற வகையிலே எடுத்துரைத்து, அதன் தொடர்ச்சியாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகவும் ஒரு விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்று, வேறு பல இயக்கங்களின் சார்பாகவும் அவர்கள் கருதியவாறு பல நிகழ்ச்சிகள் - கண்டனங்கள் - கூட்டங்கள் வாயிலாக அல்லது அமைப்புகள் வாயிலாக, அல்லது அவர்தம் செயற்குழுக்கள் வாயிலாக, பேரணிகள் வாயிலாக நடத்தப்பட்டு, திராவிடர் கழகத்தின் சார்பாகவும் பேரணி ஒன்று நடத்தப்பட்டு, தொடர்ந்து இந்தப் போராட்டத்தை ஒவ்வொரு அமைப்பும் நடத்துகின்ற வகையில் அமைந்து, தனித்தனியாக ஒவ்வொரு கட்சியும் தங்கள் இயக்கத்தின் சார்பாக இலங்கையில் நடைபெறுகின்ற கொடுமைக்கு எதிரான குரலை உயர்த்தினால் மாத்திரம் போதாது. எல்லோரின் குரலும் ஒரு குரலாக ஓங்கி ஒலிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்தக் கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது.

இது தனித்தனியாக ஒவ்வொரு கட்சியும் குரல் எழுப்புவது தவறு என்ற கருத்தின் அடிப்படையில் அல்ல. தனித்தனியாக குரல் எழுப்புகின்றவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரே குரலில் நம்முடைய வலிமையை, நம்முடைய பலத்தினைக் காட்டுகின்ற வகையில், தமிழர்களுடைய இதயம் எல்லாம் பக்கத்தில் வாடிக் கொண்டிருக்கின்ற ஒரு பெரிய இனத்தின் - தமிழ் இனத்தின் வாழ்வைப் பற்றிய ஒன்றாக இருக்கின்ற காரணத்தால் அதில் எப்படி வெற்றி காண்பது என்பதைத் தீர்மானிக்க நாம் எந்த முடிவுகளை மேற்கொள்வது என்பதைப் பற்றி கருத்தறிய, அறிந்த கருத்துக்களை எல்லாம் ஒருமுனைப்படுத்த உதவிடும் என்பதற்காகத்தான் இந்தக் கூட்டத்தை கூட்டியிருக்கின்றோம்.

இதில் கலந்து கொண்டிருக்கின்ற கட்சிகளின் தலைவர்கள் ஒவ்வொருவரும் இந்த இலங்கைத் தமிழர் பிரச்சினையில், இன்று நேற்றல்ல, நீண்ட பல காலமாக ஈடுபாடு கொண்டவர்கள் என்பதை நான் நன்றாக அறிவேன். ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர்கள் எல்லாம் இந்த இலங்கைத் தமிழர் பிரச்சினையிலே ஈடுபாடு கொண்டு, போராட்டங்களிலே கலந்து கொண்டு சிறை சென்று பல தியாகங்களுக்கு தங்களை ஒப்படைத்துக் கொண்டு அதற்காகப் போராடியவர்கள் என்பதை நான் நன்கறிவேன். அவர்கள் எல்லாம் இங்கே இருக்கின்றீர்கள்.

எனவே, உங்களின் செழுமிய கருத்துக்களை - இலங்கைத் தமிழர்களை மீட்டெடுக்கக்கூடிய, அவர்களின் இனத்தை இன்றைக்கு நாசப்படுத்துகின்ற சிங்கள அதிகாரிகள், சிங்கள இராணுவம் இவர்களிடமிருந்து அவர்களை மீட்டெடுக்க என்ன வழிவகை என்பதையும் நாம் எப்படி நம்முடைய எண்ணங்களை செயற்படுத்துவது என்பதையும் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டு உங்களின் அத்தகைய கருத்துக்களை எதிர்பார்த்து இந்த அளவில் எனது தொடக்க உரையை நிறைவு செய்கின்றேன் என்றார் கருணாநிதி.

கருத்துகள் இல்லை: