கிளிநொச்சி வைத்தியசாலை வேறு இடம் ஒன்றுக்கு மாற்றப்பட்டுள்ள போதும் அதன் அவசர சிகிச்சைப்பிரிவு மாற்றப்படவில்லை எனக் குறிப்பிட்ட லக்பிம,காயமடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காகவே இது இடமாற்றப்படவில்லை என்ற ஊகத்தை வெளியிட்டுள்ளது. எனினும் வைத்தியசாலையில் இருந்து பிரசவப்பகுதி ஏன் மாற்றப்படவில்லை என்பது தெரியவில்லை என அந்தச் செய்தித்தாள் மேலும் குறிப்பிட்டுள்ளது. கடந்த வாரம் கிளிநொச்சியின் நகர எல்லையில் இருந்து ஒன்றரைக் கிலோமீற்றர் தூரத்தில் 58 வது படைப்பிரிவினர் தமது நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். அதேநேரம், 57 வது படைப்பிரிவும் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தப்படைப்பிரிவே தமிழீழ விடுதலைப் புலிகளின் எல்லையில் இருந்து சுமார் 60 கிலோமீற்றர் தூரத்தை கடந்துவந்த படைப்பிரிவாகும். 571 வது படைப்பிரிவினர் அக்கரான்குளத்தில் நிலைகொண்டுள்ளனர். 574 மற்றும் 573 வது படைப்பிரிவினர் மாங்குளம் மற்றும் முறிகண்டி பகுதியில் நிலைகொண்டுள்ளனர்.இந்தப் படைப்பிரிவினரை ஊடறுக்கும் வகையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் ஐந்து தமிழீழ விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகப் படைத்தரப்பு தெரிவித்தபோதும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை. நேற்றைய தினம் அக்கராயன்குளத்தில் பெரும் சண்டை இடம்பெற்றுள்ளது. எனினும் சேதங்களை அறிந்துகொள்ள முடியவில்லை. ஏற்கனவே படையினரின் முன்னேற்றங்களைத் தடுக்கும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.இதன்படி, 57 வது படைப்பிரிவின் முன்னேற்றத்தை தடுப்பதற்காக அக்கராயன்குளத்திற்கும் கிளிநொச்சிக்கும் இடையில் பாதுகாப்பு அரண்களை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைத்துள்ளனர். இந்தப்பகுதியில் இலங்கையின் விமானப்படையினர் தாக்குதல்களை நடத்தியுள்ளபோதும் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் அங்கிருந்து தமது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அண்மைக்கால நகர்வுகளை பார்க்கும் போது கிளிநொச்சியை கைப்பற்றும் அரசாங்கத்தின் இலகுவான வெற்றி அறிவிப்புக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இடம்தரமாட்டார்கள் என்றே தோன்றுகிறது. தமிழீழ விடுதலைப்புலிகளது யுத்ததந்திரத்தின் அடிப்படையில்,அவர்கள் எதிரியை சண்டைக்கு இழுத்து தாக்குதல் நடத்துவதையே பார்க்க முடிகிறது. இவர்கள் அண்மைக் காலமாக தென்னிலங்கையில் நடத்திய தற்கொலை குண்டுத் தாக்குதலானது,அரசியலில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதற்கான பரீட்சார்த்தமேயாகும். இதேவேளை, தென்னிலங்கையில் இவ்வாறான தாக்குதல்களை எதிர்ப்பார்க்க வேண்டியிருக்கும் என்றும் அதனை எந்தளவு அரசாங்கம் தாங்கிப் பிடிக்கும் என்பதுவும் எதிர்காலத்தில் தெரியவரும் என லக்பிம செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது. |
திங்கள், 13 அக்டோபர், 2008
எதிரியை சண்டைக்கு இழுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியை இலங்கை அரசாங்கம் தாங்கிப் பிடிக்குமா - லக்பிம
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக