தமது நலன்கள் விடயத்தில் தமிழக கட்சிகள் எடுத்துள்ள முடிவுக்கு இலங்கையிலுள்ள தமிழ் கட்சிகள் கருத்துக்களை வெளியிட்டுள்ளன.
தமிழ் தேசிய கூட்டமைப்பு
இந்த முன்னெடுப்புகளை தமது அமைப்பு வரவேற்கிறது என்றும் இது தொடர்பில் இந்திய அரசு செவிமடுக்கும் என தாங்கள் நம்புவதாகவும் அதன் நாடாளுமன்ற உறுப்பின்ர துரை ரட்ணசிங்கம் கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்திய அரசு ஒரு முடிவை எடுத்து இலங்கை அரசுக்கு ஒரு அழுத்தம் கொடுத்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தி, இருதரப்பினரையும் பேச்சு வார்த்தைக்கு அழைத்து தங்களுக்கு ஒரு நியாயமான தீர்வை தரவேண்டும் என்பதே தமது கூட்டமைப்பின் எதிர்பார்ப்பாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்கிற நம்பிக்கையும் தங்களுக்கு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட வேண்டும் என தங்கள் அமைப்பும் விரும்புவதாக தெரிவித்த சித்தார்த்தன் அவர்கள், அவ்வாறு ஏற்படும் போது வன்னிப் பகுதியிலுள்ள மக்கள் தமது விருப்பபடி வெளியேறிச் செல்ல புலிகள் அனுமதிக்க வேண்டும் எனவும் தாங்கள் கோருவதாகவும் கூறினார்.
மேலும் போர் நிறுத்த உடன்பாடு ஒன்று ஏற்படுமானால், அது யுத்தம் நிரந்தரமாக முடிவுக்க வர வழிவகுக்க வேண்டும் என்பதே தமது அமைப்பின் எதிர்பார்ப்பாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்
தமிழகத்திலே தேர்தல் காலங்கள் நெருங்குகிற போதெல்லாம் அங்குள்ள கட்சிகள் இலங்கை தமிழர்கள் நலன் என்கிற விடயத்தை பெருமளவில் முன்னெடுப்பதை காணக் கூடியதாக இருக்கிறது என்று கருத்து வெளியிட்டுள்ளார் இந்த அமைப்பின் தலைவரான கருணா எனப்படும் வினாயகமூர்த்தி முரளிதரன்.
தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளும் மக்களும் இலங்கை தமிழ் மக்கள் மீது காட்டுகின்ற அக்கறை விடுதலைப் புலிகளை காப்பாற்றும் வெளிப்பாடாக இருக்கக் கூடாது என்பது தமது அமைப்பின் கருத்தாகும் எனவும் அவர் கூறினார்.
இந்திய அரசாங்கம் தற்போது வட இலங்கையில் நடைபெற்று வரும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு கூறுவது இலங்கைக்கு ஆபத்தாக அமையும் என தாங்கள் கருதுவதாகவும் கருணா கருத்து வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் இறையாண்மையை மதித்து இந்திய தனது வெளிவிவகார கொள்கைகளை முன்னெடுக்கும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறுகிறார்.
தமிழ் மக்களுக்கு உதவு இந்தியா முன்வந்தால் அதை இலங்கை அரசின் மூலம் செய்யப்படுவதையே தாங்கள் வரவேற்பதாகவும் கருணா கூறுகிறார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
இலங்கை தமிழர்கள் நலன் விடயத்தில் தற்போது தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகள் எடுத்து வரும் முன்னெடுப்புகள் போலித் தனமானது என தாங்கள் கருதுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான ரவூஃப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
எனிமும் தமிழக கட்சிகளின் நடவடிக்கைகளின் மூலம் இந்திய அரசு ஏதாவது முன்னெடுப்புகளுக்கு முன்வருமாயின் அதை வறவேற்பதாகவும் அவர் கூறுகிறார்.
இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் இந்திய அரசு முஸ்லிம்களின் பரிமாணம் குறித்து தொடர்ந்தும் ஒரு பார்வையை கொண்டிருக்காதது பற்றி தாங்கள் வேதனைப் படுவதாகவும் ரவூஃப் ஹக்கீம் கருத்து வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி, மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான இராதாகிருஷ்ணன் ஆகியோர் உட்பட அனைவரும் வெளியிட்ட கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
இலங்கையில் நடைபெற்று வரும் மோதல்கள் கவலையளிப்பதாக இருக்கின்றன: இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்
இந்தியத் தலைநகர் புதுடில்லியில் புதன்கிழமையன்று இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்க நாடுகளின் உச்சிமாநாட்டின் முடிவில் அந்நாட்டுத் தலைவர்களுடன் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, மன்மோகன் சிங் இக்கருத்தைத் தெரிவித்தார்.
இலங்கையில் இரண்டு வாரங்களுக்குள் போர் நிறுத்தத்தைக் கொண்டுவர இந்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழக எம்.பி.க்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக பதவி விலகுவார்கள் என்று தமிழகத்தில் செவ்வாய்கிழமை மாலை திமுக தலைவரும் முதல்வருமான கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தக் கூட்டத்தில், அதிமுக, மதிமுக, பாஜக, தேமுதிக கட்சிகள் பங்கேற்கவில்லை.
இந் நிலையில், இலங்கை நிலவரம் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மன்மோகன் சிங் அவர்கள் இலங்கையில் நிலவும் சூழ்நிலை, இந்திய அரசுக்கு மிகவும் கவலையளிப்பதாக உள்ளது என்று தெரிவித்தார்.
அங்கு அதிகரித்து வரும் மோதல்கள் குறித்தும், பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்கள் குறித்தும், உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்தவர்கள் அதிகரித்திருப்பது குறித்தும், இந்திய மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கும்போது அவர்கள் துன்புறுத்தப்படுவது மற்றும் கொல்லப்படுவது குறித்தும் கவலை கொள்வதாகவும் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
இராணுவ நடவடிக்கை தீர்வாகாது
இலங்கைப் பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை தீர்வாகாது என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
இலங்கையில் நிலவும் சூழ்நிலைக்கு ராணுவ வெற்றி தீர்வாகாது என்றும், இலங்கையின் இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கு உட்பட்டு, பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் இந்தியா எப்போதும் நம்புகிறது. அதே நேரத்தில், தமிழ் சிறுபான்மையினரின் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கருத்துத் தெரிவித்தார்.
வெளியுறவு கொள்கை குறித்து மாநில அரசுகள் மத்திய அரசை வற்புறுதக் கூடாது என்று கூறுகிறது காங்கிரஸ்
இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கருத்துத் தெரிவிக்கும்போது, நாட்டின் வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பான நடவடிக்கைகள் மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டவை என்று தெரிவித்தார்.
எங்கு தவறு நடந்தாலும் அதைக் கண்டிக்கும் அதே வேளையில், அதைவிடக் கூடுதலாக எதையும் செய்யவோ, செய்யுமாறு மத்திய அரசிடம் கேட்கவோ கூடாது. ஏனென்றால், இவை மிகவும் சர்ச்சைக்குரிய பிரச்சினைகள். என்றார் அபிஷேக் சிங்வி.
இலங்கையின் ஒற்றுமை பாதுகாக்கப்பட வேண்டும்: பாஜக
பாஜகவைப் பொருத்தவரை, இலங்கையின் ஒற்றுமை பாதுகாக்கப்பட வேண்டும். அங்கு அமைதி ஏற்பட வேண்டும். அதே நேரத்தில், தமிழ் மக்களின் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இந்தப் பிரச்சினையை இலங்கை அரசிடம் இந்திய அரசு எடுத்துச் செல்ல வேண்டும் என்றார் பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக