வியாழன், 16 அக்டோபர், 2008

அமெரிக்கா திவாலாகி விட்டது.





அமெரிக்கா திவாலாகிவருகிறது என்பதை ஒரு தற்காலிக பின்னடைவாக மட்டுமே பலரும் எழுதுகின்றனர். உண்மையான பிரச்சினை என்ன, இது உலகம் முழுவதும் பாதிப்பு ஏற்படுத்துவது ஏன், இதனால் எத்தனை கோடி மக்கள் வாழ்விழக்கப்போகிறார்கள் என்பதையெல்லாம் ஒருங்கிணைந்த முறையில் இக்கட்டுரை விளக்குகிறது. சூதாட்ட பொருளாதரமும் அது ஏற்படுத்தும் தவிர்க்க இயலாத அழிவும்தான் இன்றைய முதலாளித்துவப் பொருளாதாரம். அதை ஆய்ந்து சொல்கிறது இந்தக் கட்டுரை. தமிழிலும், ஆங்கிலத்திலும் இத்தகைய கண்ணோட்டத்தோடு எழுதப்படும் கட்டுரைகள் அரிது என்பதால் நண்பர்கள் இக்கட்டுரையை பலருக்கும் அறிமுகப்படுத்துமாறும் உங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறும் கோருகிறோம். தமிலிஷ் இணையத்தில் இக்கட்டுரைக்கு நீங்கள் வாக்களிப்பதன் மூலம் பலருக்கும் இக்கட்டுரை போய்ச் சேருவதற்கு உதவி செய்ய முடியும்.

………………………………………………

அமெரிக்கா திவாலாகி விட்டது. பிரெஞ்சுப் புரட்சிக்கு முந்தைய பிரான்சை அமெரிக்காவின் நிலைமை நினைவூட்டுகின்றது என்கிறார் ஒரு பத்திரிகையாளர். கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி ஃபான்னி மே, ஃபிரட்டி மாக் என்ற இரு வீட்டு அடமான வங்கிகள் திவாலாவதைத் தடுக்க அவற்றை அரசுடைமையாக்கியது புஷ் அரசு. அரசுடைமையாக்கப் படும்போது அவற்றின் சொத்து மதிப்பு 5500 கோடி டாலர்கள். அவற்றின் கடனோ 5,00,000 கோடி டாலர்கள். அடுத்து உலகின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம் என்று கூறப்படும் அமெரிக்கன் இன்டர்நேசனல் குரூப் நிறுவனம் திவாலின் விளிம்பில்; இந்தியாவில் காப்பீட்டத் துறையைத் தனியார்மயமாக்க தீவிரமாக முயன்று வரும் இந்த நிறுவனத்தைக் காப்பாற்ற 8500 கோடி டாலர்களை வழங்கி அதன் 80% பங்குகளை வாங்கியிருக்கின்றது அமெரிக்க அரசின் ஃபெடரல் ரிசர்வ்.

லேமன் பிரதர்ஸ், மெரில் லின்ச், கோல்டுமேன் சாக்ஸ், மார்கன் ஸ்டான்லி, வாக்கோவியா, வாஷிங்டன் மியூச்சுவல்… என உலக நிதிச் சந்தையின் சர்வவல்லமை பொருந்திய தேவதைகளாகக் கருதப்பட்ட நிறுவனங்கள் எல்லாம் நாளுக்கொன்றாகக் கவிழ்ந்து கொண்டிருக்கின்றன.

அமெரிக்காவின் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மட்டுமின்றி, ஆலைகள், ஐ.டி துறைகளிலும் திடீரென்று ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்படுகின்றார்கள்.

கடனை அடைக்க முடியாததால் வெளியேற்றப்பட்ட இலட்சக் கணக்கான மக்களின் வீடுகள் அமெரிக்காவில் வாங்குவாரின்றிப் பூட்டிக் கிடக்கின்றன. ஐ.டி. தொழிலின் மையமான கலிபோர்னியா மாநிலமே திவால் மாநிலமாகி விட்டது. பிரைஸ் வாட்டர் கூப்பர்ஸ் என்ற பிரபல நிறுவனத்தின் நிதி ஆலோசகரான கார்த்திக் ராஜாராம் என்ற என்.ஆர்.ஐ இந்தியர், தனது மனைவி, மூன்று குழந்தைகள், மாமியார் அனைவரையும் சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ரியல் எஸ்டேட் சூதாட்டத்தில் அவர் குவித்த கோடிகள் ஒரே நாளில் காணாமல் போயின.

தவணை கட்டாததால் பறிமுதல் செய்யப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 50 இலட்சம் என்று அறிவித்திருக்கின்றார் அமெரிக்க நிதியமைச்சர் பால்சன். அதாவது, அரசின் கணக்குப்படியே சுமார் 3 கோடி மக்கள், அமெரிக்க மக்கள் தொகையில் 10% பேர் புதிதாக வீடற்றவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். வாங்குவாரின்றிப் பூட்டிக் கிடக்கும் வீடுகள் சூறையாடப்படுகின்றன.

ஆட்டோமொபைல் தொழிலில் உலகின் தலைநகரம் என்றழைக்கப்பட்ட டெட்ராய்ட், அமெரிக்காவின் திவால் நகரமாகி விட்டது. அங்கே வீட்டின் விலை உசிலம்பட்டியைக் காட்டிலும் மலிந்து விட்டது. இரண்டு படுக்கையறை கொண்ட வீட்டின் விலை ரூ. 75,000.

அமெரிக்காவில் வெடித்த பொருளாதார நிலநடுக்கம், உலகெங்கும் பரவுகின்றது. ஒரு ஊழியின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறோம் என்று அலறுகிறார் பிரெஞ்சுப் பிரதமர்.

எந்த நாட்டில் எந்த வங்கி எப்போது திவாலாகும் என்று யாருக்கும் தெரியவில்லை. வங்கிகளின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். “ஐரோப்பிய வங்கிகள் திவாலானால் 50,000 யூரோக்கள் வரையிலான டெபாசிட் தொகையைக் கொடுக்க ஐரோப்பிய அரசுகள் பொறுப்பேற்பதாக” ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருக்கின்றது. இந்தியா உள்ளிட்டு உலகெங்கும் பங்குச்சந்தைகள் கவிழ்ந்து பாதாளத்தை நோக்கிப் பாய்ந்து கொண்டிருக்கின்றன.

உலகப் பொருளாதாரத்தின் அச்சாணி என்றும், உலக முதலாளித்துவத்தின் காவலன் என்றும் பீற்றிக் கொள்ளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திய முதலாளி வர்க்கத்தின் முகத்தில் உலகமே காறி உமிழ்கின்றது.

“பொருளாதாரத்தில் அரசு எந்த விதத்திலும் தலையிடக் கூடாது; சந்தைப் பொருளாதாரம் ஒன்றுதான் மனித சமூகம் கண்டறிந்த மிகச்சிறந்த பொருளாதார ஏற்பாடு” என்று கூறி, பின்தங்கிய நாடுகள் அனைத்தின் மீதும் தனியார்மயத்தைக் கதறக் கதறத் திணித்து வரும் அமெரிக்க முதலாளி வர்க்கம், கூச்சமே இல்லாமல் ‘மக்களின் வரிப்பணத்தை வைத்து எங்களைக் கைதூக்கி விடுங்கள்’ என்று அமெரிக்க அரசிடம் கெஞ்சுகின்றது.

திவால்கள் இத்துடன் முடியப்போவதில்லை என்பது தெளிவாகிவிட்டது. முதலாளிவர்க்கத்தைக் கைதூக்கி விடுவதற்காக 70,000 கோடி டாலர் (35 இலட்சம் கோடி ரூபாய்) பணத்தை அரசு வழங்க வேண்டும் என்ற புஷ் நிர்வாகத்தின் தீர்மானத்தை அமெரிக்காவின் ‘மக்கள் பிரதிநிதிகள்’ ஒருமனதாக நிறைவேற்றி விட்டார்கள்.

அமெரிக்க மக்களோ ஆத்திரத்தில் வெடிக்கிறார்கள். உலக முதலாளித்துவத்தின் புனிதக் கருவறையான வால் ஸ்ட்ரீட் எங்கும் மக்கள் கூட்டம். “தே.. பசங்களா, குதிச்சுச் சாவுங்கடா..” என்று வங்கிகளை அண்ணாந்து பார்த்துத் தொண்டை கிழியக் கத்துகின்றார்கள் மக்கள். “குப்பைக் காகித்தை வாங்கிக் கொண்டு முதலாளிகளுக்குப் பணம் கொடுக்கும் அரசே, இந்தா என் வீட்டுக் குப்பை. எனக்கும் பணம் கொடு!” என்று ஆர்ப்பாட்டம் நடத்துகின் றார்கள். வால் ஸ்ட்ரீட் வங்கிகளின் நெடிதுயர்ந்த கட்டிடங்களில் அமெரிக்க மக்களின் முழக்கம் மோதி எதிரொலிக்கின்றது ‘முதலாளித்துவம் ஒழிக!’

நன்றி பதிவு இணையத்தளம்

கருத்துகள் இல்லை: