யுத்தத்துக்காக நிமிடமொன்றுக்கு 6,800 ரூபா செலவிடப்படுகின்றது. இத்தகைய செலவினை கட்டுப்படுத்துவதற்கு யுத்தம் விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். இதற்கான முயற்சியிலேயே அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.கதிர்காமத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். இங்கு அவர் மேலும் கூறியதாவது: அரசாங்கம் தேவையுடன் இந்த யுத்தத்தைச் செய்யவில்லை. நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டை சகல துறைகளிலும் கட்டியெழுப்பவே வேண்டா வெறுப்புடன் யுத்தத்தை அரசாங்கம் செய்கிறது. அரசு யுத்தம் புரிவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.
எவ்வாறேனும் இந்த யுத்தத்தில் அரசு வெற்றியீட்டியே தீரும். அரசாங்க ஊழியர்கள் சரியான முறையில் தங்களது பங்களிப்புகளை வழங்கி கடமைகளை நேர்த்தியான முறையில் செய்யாது போனால் நாட்டை ஒருபோதும் கட்டியெழுப்ப முடியாது. இதனை அரசாங்க ஊழியர்கள் தங்களது மனதில் பதித்து நாட்டின் முன்னேற்றத்துக்காக தங்களது பங்களிப்புகளை தங்குதடையின்றி வழங்க வேண்டும். கூட்டுத்தாபன சபைகளில் எமது அரசாங்க ஊழியர்கள் 12 இலட்சம் பேர் வரை இருக்கின்றனர்.
எனவே, சமுகத்தில் 12 பேருக்கு ஒருவராக அரச ஊழியர்கள் இருக்கின்றனர். அவர்களின் சேவை நேர்த்தியான முறையில் சமுகத்திக்கும், நாட்டுக்கும் கிடைக்காது போனால் எந்த ஒரு முன்னேற்றத்தையும் காணமுடியாது, என்று தெரிவித்துள்ளார்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக