திங்கள், 13 அக்டோபர், 2008

மணிரத்னம் படப்பிடிக்கு தடை!




அபிஷேக் - ஐஸ்வர்யாராய்- விக்ரம் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் மணிரத்னம் பெரும் பொருட்செலவில் உருவாக்கிவரும் ராவணா படத்தின் படப்பிடிப்புக்கு கேரள வனத்துறை திடீர் தடை விதித்துவிட்டது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பை கொச்சி அருகே உள்ள இயற்கை எழில் கொஞ்சம் முழுங்குழி, மலையாட்டூர் போன்ற வனப் பகுதிகளில் எடுத்து வந்தார் மணிரத்னம்.

இந்தப் பகுதிகள் எகோ டூரிஸம் திட்டத்தின் கீழ் வருவதால், சுற்றுச் சூழல் மாசுபடக் கூடாது என்ற நோக்கில் இங்கே படப்பிடிப்புகளை அனுமதிப்பதில்லை. ஆனால் கேரள கம்யூனிஸ்டுகளுடன் தனக்குள்ள நெருக்கம் காரணமாக, அங்கு படப்பிடிப்பு நடத்த சிறப்பு அனுமதி பெற்றிருந்தார் மணிரத்னம்.

கிட்டத்தட்ட ஒருவாரம் ஷூட்டிங் நடத்தியிருந்த நிலையில் அப்பகுதியைக் கண்காணிக்க வந்த வனத்துறை அதிகாரிகள், அங்கிருந்த நிலைமையைக் கண்டு அதிர்ந்துவிட்டனர்.

பச்சைப்பட்டு விரித்தது போலிருந்த அந்த இயற்கை வனப் பகுதியில் மணிரத்னத்தின் படப்பிடிப்புக் குழு தற்காலிக குடில்களை அமைத்தும், பிளாஸ்டிக் குப்பைகளை ஆங்காங்கே வீசியும் சேதப்படுத்தி இருந்தார்களாம்.

இது அப்பகுதியின் சுற்றுச் சூழலைக் கடுமையாக பாதித்துவிட்டதாகக் கருதிய கேரள வனத்துறை அதிகார்கள், மேலிடத்தின் அனுமதியோடு, ராவணா ஷூட்டிங்கை ரத்து செய்ய உத்தரவிட்டனர்.

அந்தப் பகுதியில் கடும் மழை பெய்வதால், படப்பிடிப்பு உபகரணங்கள் நனைந்துவிடாமல் இருக்கவே தற்காலிகக் குடில்கள் அமைக்கப்பட்டன என மணிரத்னம் கூறிய சமாதனத்தை அதிகாரிகள் ஏற்கவில்லை.

அந்தப் பகுதியிலிருந்து உடனடியாக மணிரத்னம் படப்பிடிப்புக் குழு வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இங்கு 25 நாட்கள் படப்பிடிப்பு நடத்த மணிரத்னம் சிறப்பு அனுமதி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதும் மணிரத்னத்தின் படப்பிடிப்புக்கு எதிராக கடும் ஆட்சேபணைகளை எழுப்பியுள்ளது கேரள மாநில சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் அமைப்பு.

எந்தப் படப்பிடிப்புக்கும் அனுமதி தரப்படாத இந்தப் பகுதியில் மணிரத்னத்துக்கு மட்டும் அனுமதி வழங்கியது எந்த அடிப்படையில் என கேரள அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது இந்த அமைப்பு.

கருத்துகள் இல்லை: