புதன், 8 அக்டோபர், 2008

ஜானகபெரேராவை கொலை செய்ய வேண்டிய தேவை புலிகளுக்கில்லை - ஐ.தே.க



ஜானக பெரேராவின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் பல்வேறு ஊகங்கள் எழுப்பப்படும் நிலையில் விடுதலைப்புலிகளை நோக்கி விரலை நீட்ட முடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க சபையில் தெரிவித்தார். அரசாங்கத்தின் ஒப்பந்தத்திற்கு அமைவாக படுகொலை நடைபெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. இது உண்மையா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் , ஜானக பெரேரா தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பாதுகாப்பு கேட்ட போது தமிழீழ விடுதலைப்புலிகளால் எவ்விதமான பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அவருக்கு பாதுகாப்பினை வழங்க மறுத்து விட்டார். அவருக்கு பாதுகாப்பு வழங்க மறுத்தமையின் மூலமாக அவரை கொலை செய்வதற்கான வழி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. தாக்குதலுக்கு முன்னர் படையினர் வீடு வீடாக, கட்டிலுக்கு மேலும் கீழும், மலசல கூடங்களுக்குள்ளும் தேடுதலை மேற்கொண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் இல்லையென்று கூறினர். தாக்குதலுக்குப் பின்னர் காவற்துறையினரால்; விடுக்கப்பட்ட அறிவிப்பு, அபாயகரமானது மட்டுமல்லாது சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அநுராதபுரத்திற்கு சில தினங்களுக்கு முன்னர் கிழக்கு மாகாண முதலமைச்சர் சுற்றுலா சென்றமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள், கருணா, பிள்ளையான் குழுக்களே தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டனர் என்கின்றனர். எனினும், புதிய நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்ற உறுப்பினரின் சேவைக்கு பரிசளிக்கும் வகையிலேயே ஜானக பெரேராவின் மீது தற்கொலைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றதே. இது உண்மையா? புதிய நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற உறுப்பினர் தொடர்பில் உள்ளூரில் மட்டுமல்ல சர்வதேசத்துக்கும் தெரியும் என்பதுடன் ஓய்வு பெற்ற ஓர் இராணுவத் தளபதியை கொலை செய்ய வேண்டிய தேவை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: