வெள்ளி, 10 அக்டோபர், 2008

புலிகளுக்கு உதவிபுரிந்து கோடிக்கணக்கில் சம்பாதித்த சிங்கள வர்த்தகர்




இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தலைவராகச் செயற்பட்டு வந்த துவான் முத்தாலிப் படுகொலை செய்யப்பட்டது சம்பந்தமாகத் தொடர்ந்தும் தீவிர விசாரணைகளை விசேட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது குறித்த கொலை நடவடிக்கையின் பின்னணியில் முக்கிய நபராக கோடீஸ்வரராகிய சிங்கள வர்த்தகர் ஒருவரே செயற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்த வர்த்தகர் பாணந் துறையில் ஹிரண பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் இவ்வாறு மேற்படி கொலைக்கும் அவருக்கும் இடையே உள்ள நெருங்கிய தொடர்பு விசாரணைகளின் போது தெரியவந்ததைத் தொடர்ந்து பொலிஸ் விசேட குழுவினர் கடந்த 4 ஆம் திகதி குறித்த ஹிரண பிரதேசத்திற்குச் சென்று மேற்படி கோடீஸ்வர வர்த்தகரைக் கைது செய்ததாக பாணந்துறைப் பொலிஸ் தலைமையத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இந்த வர்த்தகரைக் கைது செய்துள்ள விசேட பொலிஸ் குழுவினர் அவர் பயன்படுத்திவந்த ஆடம்பர பிராடோ ஜீப்வண்டியையும் சோதனை நடவடிக்கைகளுக்காகப் பொறுப்பெடுத்துள்ளனர். இந்த பிராடோ ஜீப் வண்டி ரூபா 90 இலட்சம் பெறுமதியானதெனவும் மற்றும் ஆடம்பர வசதிகளுடன் விசேட இயக்க வசதிகளும் கொண்டதெனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் முத்தாலிப் படுகொலை 2005 ஆம் ஆண்டில் நிகழ்ந்த சம்பவமாகும். இந்தக் கொலை சம்பந்தமாக புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் சிலர் சந்தேகத்தின் பேரில் விசேட பொலிஸ் புலனாய்வுக் குழுவினரால் கைது செய்யப்பட்டதுடன், இதுவரையில் அவர்களிடம் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. மேற்படி புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் விசாரணையின்போது தெரிவித்த தகவல்களிலிருந்தே குறித்த சிங்கள இனத்தைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகருக்கும் புலிகள் இயக்கத்தினருக்கும் இடையே இருந்துவந்த தொடர்பும் முத்தாலிப் கொலையில் மேற்படி சிங்கள வர்த்தகர் முக்கிய பங்காளியாக இருந்ததும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து விசேட பொலிஸ் குழுவினர் கடந்த சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாக அந்த வர்த்தகரைத் தேடிப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தபோதும் அவர் பிடிபடாமலே மறைந்திருந்தார். இந்த வர்த்தகர் வீடு, காணி மற்றும் நிலச்சொத்துகள் விற்பனை செய்யும் வர்த்தகத்துடன் வேறுபல வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருபவர் எனவும் இதன் மூலம் குறிப்பிட்ட வர்த்தகத்தில் பெரும் சம்பாத்தியம் பெற்று கோடீஸ்வரராக வாழ்ந்துவந்தார் எனவும் கொழும்பு மாநகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்குள் ஊடுருவும் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளுடன் இவர் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தார் எனவும் பொலிஸ் தரப்புத் தகவல்களிலிருந்து மேலும் தெரியவந்துள்ளது. இவ்வாறு இந்த வர்த்தகர் பயங்கரவாதத் தாக்குதல்களுக்காக நுழையும் பயங்கரவாதிகளுக்கு வசிப்பிட வசதிகள் மற்றும் உதவிகளைச் செய்வதன் மூலம் பெருந்தொகையில் சம்பாதித்து வந்துள்ள?ர்.

இவ்வாறு பல்வேறு தடவைகளிலும் புலிகள் இயக்கத்தினருக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் இலட்சக்கணக்கில் அவர்களிடமிருந்து பணம் பெற்று வந்துள்ளார். இந்தத் தகவல்களை ஏற்கனவே கைது செய்யப்பட்டு பொலிஸ் புலனாய்வுக் குழுவினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வரும் புலிகள் இயக்கப் பயங்கரவாதியினரே தெரிவித்ததாகவும் அண்மையில் அவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் மூலமே மேற்படி சிங்கள வர்த்தகரைத் தற்போது தீவிர தேடுதல் நடவடிக்கை மூலம் கைது செய்ய முடிந்ததாகவும் பாணந்துறை பொலிஸ் தலைமையகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பாணந்துறை தலைமையக விசேட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் மேற்படி சிங்கள வர்த்தகரிடம் ஆரம்ப விசா ரணைகளை முடித்துக்கொண்டுள்ளதாகவும் தொடர்ந்து அவரை மேலதிக விசாரணைக்காக கொழும்பு பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவரை கடந்த 5 ஆம் திகதி பயங்கரவாத தடுப்புப் பிரிவில் ஒப்படைக்கவே முதலில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. குறித்த சிங்கள வர்த்தகர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாணந்துறை பொலிஸ் தலைமையகம் தரப்பில் புலன் விசாரணைகள் பாணந்துறை பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரி சுமித் எதிரிசிங்க அறிவுறுத்தலின் பேரிலேயே ஆரம்ப விசாரணைகள் நடத்தப்பட்டன.

லங்காதீப:06/10/2008

கருத்துகள் இல்லை: