திங்கள், 13 அக்டோபர், 2008

படையினர் கிளிநொச்சியினை கைப்பற்ற 48 மணி நேரமே உள்ளது - ஹெல உறுமய



படையினர் கிளிநொச்சியினைக் கைப்பற்றுவதற்கு இன்னமும் 48 மணி நேரமே உள்ளது. இந்த நிலையில் இந்தியா அல்ல எந்தவொரு நாட்டினதும் அழுத்தத்திற்கு அடிபணிந்து விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தினை அரசாங்கம் கைவிடக் கூடாது என்று ஜாதிக ஹெல உறுமயவின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பான செயலாளர் நரேந்திர குணதிலக தெரிவித்தார்.

கருணாநிதி ஜெயலலிதா கூட்டணி தமிழர்களுக்காக குரல் கொடுக்கவில்லை. தேர்தலுக்கான நாடகத்தையே அரங்கேற்றுகின்றனர். வைகோ கூட்டணி பிரபாகரனின் தோல்வியைத் தாங்க முடியாது தவிக்கின்றது என்றும் அவர் கூறினார்.

இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு மாறி வருவது தொடர்பில் கருத்து கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். இது குறித்து நரேந்திர குணதிலக மேலும் கூறியதாவது,

இந்தியா சுதந்திர மற்றும் இறையாண்மையுடைய நாடு. அதேபோல் இலங்கையும் சுதந்திர மற்றும் இறையாண்மை கொண்ட நாடாகும். எமது அயல்நாட்டை மதிக்கின்றோம். ஆனால், அதற்காக மண்டியிட முடியாது. இலங்கையில் பயங்கரவாதப் பிரச்சினை தலைதூக்குவதற்கு இந்தியாவே வழிவகுத்தது. இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி பயங்கரவாதிகளுக்கு ஆயுதப் பயிற்சிகளை வழங்கி இறுதியில் ஆயுதங்களுக்கே பலியானார்கள். இது பழைய கதையாகும்.

ஆனால், இன்று சார்க் நாடுகளின் முதன்மை நாடாக இந்தியா திகழ்கின்றது. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு ஆயுதங்களையும் பயிற்சிகளையும் வழங்கியது. ஆனால், இன்று தமிழகத்தில் ஏற்பட்டுள்ள விடுதலைப் புலிகளுக்கு சார்பான போராட்டங்களால் நிலை தடுமாறிப் போயுள்ளது. காரணம் அடுத்த வருடம் அங்கு தேர்தல் இடம்பெறவுள்ளது.

எனவேதான் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை நிறுத்துமாறு அழுத்தம் கொடுக்கின்றது. இந்திய அரசியல் நன்மைகளுக்காக பயங்கரவாதத்திற்கு எதிரான போரை நிறுத்த முடியாது. இதனை சர்வகட்சி மாநாட்டின் போது ஜனாதிபதியிடம் தெரிவித்தோம். இலங்கைத் தமிழ் மக்களுக்காக கருணாநிதியும் ஜெயலலிதாவும் போராட்டம் நடத்தவில்லை. தேர்தலுக்காக தமிழக மக்களின் ஆதரவைப் பெறவே நாடகமாடுகின்றனர்.

வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழ் மக்களின் விடுதலை வீரன். ஒரு போதும் தோல்வியுறச் செய்ய முடியாதென்ற மாயையை வைகோ, நெடுமாறன், ராமதாஸ் போன்றோர் தமிழக மக்கள் மத்தியில் ஏற்படுத்தி அரசியல் நடத்தினர். இதனால் விடுதலைப் புலிகளுக்கு தமிழக மக்கள் மத்தியில் ஆதரவு இருந்தது. இதனாலேயே ஆயுதக் கடத்தல்களை மேற்கொண்டனர். பல்வேறு உதவிகளை வழங்கினர்.

ஆனால், இன்னும் 48 மணித்தியாலங்களுக்குள் கிளிநொச்சி எமது படையினர் வசம். பல முனைகளிலும் எமது படையினர் வெற்றி பெறுகின்றனர். புலிகள் தோல்வியின் விளிம்பிற்கே சென்று விட்டனர். எனவே போராட்டங்களை தமிழகத்தில் ஆரம்பித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: