வெள்ளி, 10 அக்டோபர், 2008

(2 ம் இணைப்பு )கிளிநொச்சியில் சிறிலங்கா வான்படை குண்டுத்தாக்குதல்: தாயும் மகளும் பலி; 2 சிறுவர்கள் உட்பட 7 பேர் காயம்



கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன் பகுதியில் சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் தாயும் மகளும் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டு சிறுவர்கள் உட்பட ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

பரந்தனில் உள்ள குமரபுரம் மக்கள் குடியிருப்பு மீது இன்று வெள்ளிக்கிழமை காலை 6:25 நிமிடமளவில் சிறிலங்கா வான்படையின் கிபீர் ரக வானூர்திகள் நான்கு தடவைகள் குண்டுத்தாக்குதலை நடத்தின.

இத்தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் உட்பட ஏழு பேர் காயமடைந்துள்ளனர். இதில் இரண்டு சிறுவர்களும் அடங்குவர்.



பொதுமக்களின் 12 வீடுகள், கால்நடைகள், பயன்தரு மரங்கள் உட்பட அனைத்தும் முற்றாக அழிக்கப்பட்டு சுடுகாடு போன்று குடியிருப்பு பகுதி காட்சியளிக்கின்றது.

பெருமளவிலான மக்கள் பதுங்குகுழிகளில் அடைக்கலம் தேடிக்கொண்டதனால் பாரிய உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.

குண்டுத்தாக்குதலில் பரந்தன் குமரபுரத்தைச் சேர்ந்தவரும் பரந்தன் இந்து வித்தியாலய பாடசாலையின் ஆசிரியருமான அருமைநாதன் சந்திராதேவி (வயது 50) சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளார். இவரின் மகளான அ.அச்சிகா (வயது 10) படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காத நிலையில் பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுமி அண்மையில் 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் தேர்வு எழுதியிருந்தார்.





குமரபுரத்தைச் சேர்ந்தவர்களான தா.அருமைநாதன் (வயது 52)

இவரின் மகனான அ.அஜிதன் (வயது 12)

த.சிவானந்தன் (வயது 39)

க.யோகம்மா (வயது 65)

சிறிகாந்தா துவாரகன் (வயது 13)

மனோகரன் உசா (வயது 32)

ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த ஏழாவது நபரின் பெயர், விவரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

கிளிநொச்சி நகருக்கு வடக்காக இரண்டு கிலோ மீற்றர் தொலைவில் பரந்தன் உள்ளது.

அதேநேரம், இன்று காலை 7:15 நிமிடமளவில் முரசுமோட்டை முருகானாந்த மகாவித்தியாலத்தை அண்மித்த மக்கள் குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா வான்படை குண்டுத்தாக்குதல் நடத்தியுள்ளது.

இத்தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார். இடம்பெயர்ந்து தங்கியுள்ள மக்களின் வாழ்விடங்கள் சேதமாகியுள்ளதுடன் இன்று கற்றல் செயற்பாடுகளுக்காக பாடசாலை சென்ற மாணவர்கள் அலறி அடித்து ஓடினர்.

கருத்துகள் இல்லை: