திங்கள், 13 அக்டோபர், 2008

ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ஓக். 17 இல் கடையடைப்பு: வணிகர் சங்கங்களின் பேரவை



ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (17.10.08) தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் கடையடைப்பு நடத்தப்படவுள்ளது.

இது தொடர்பில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

ஈழத் தமிழ் மண்ணில் சிங்கள இனவெறி அரசு மேற்கொண்டு வரும் இனப் படுகொலையை கண்டித்தும், இந்த தமிழினப் படுகொலையை இந்திய அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமெனக் கோரியும், கடல் சார்ந்து வாழும் மண்ணின் மைந்தர்களான தமிழக மீனவர்களை ஈவு இரக்கமில்லாமல் சுட்டுக்கொல்லும் சிங்கள கடற்படைக்கு பாடம் புகட்டக்கோரியும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (17.10.08) தமிழகம் முழுவதும் கடையடைப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பெரு வணிகர்கள் முதல் சிறு வணிகர்கள் வரை அனைவரும் அதில் பங்கேற்பார்கள். வணிகர்களின் வாடிக்கையாளர்களான பொதுமக்கள் இந்த கடையடைப்பு போராட்டத்தின் அவசியத்தையும், அவசரத்தையும் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ் மக்களின் உயிரோடும், உணர்வோடும் தொடர்புடைய போராட்டம் என்பதால் இந்த கடையடைப்பு போராட்டத்தில் இருந்து எந்த வர்த்தகப் பிரிவுக்கும் விதிவிலக்கு கிடையாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கிறோம்.

மிகச்சிறிய டீக்கடை முதல் மிகப்பெரிய நகைக் கடைகள் வரை, அனைத்து கடைகளையும் அடைத்துவிட்டு தமிழர்களின் உணர்வை வணிகர்கள் வெளிப்படுத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: