புதன், 15 அக்டோபர், 2008

ஐ.தே.க.விலிருந்து ஆளுங்கட்சிக்கு சென்ற உறுப்பினர்கள் மீண்டும் திரும்பும் சாத்தியம்?



ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஆளும் கட்சிக்குச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் கட்சிக்குத் திரும்பக்கூடும் என இலங்கையின் முன்னணி இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கட்சியைவிட்டுப் பிரிந்து ஜனநாயகக் குழுவாக இயங்கிவரும் 17 உறுப்பினர்களையும் மீள அழைக்கும் உத்தியோகப்பற்றற்ற முயற்சிகள் ஓரளவு வெற்றியடைந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உள்விவகாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேகுணவர்தன உள்ளிட்ட சில முக்கிய பிரமுகர்கள் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கரு ஜயசூரிய, எம்.எச்.மொஹமட், காமினி லொக்குகே, தர்மதாஸ பண்டா, பீ.தயாரத்ன ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் இணையும் சாத்தியம் இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை, மஹிந்த விஜேசேகர, லக்ஷ்மன் யாபா அபேவர்தன, ஹேமகுமார நாணயக்கார, ஜீ.எல்.பீரிஸ், மிலிந்த மொரகொட, நவீன் திஸாநாயக்க, ராஜித சேனாரத்ன ஆகியோர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் அமைச்சர் கரு ஜயசூரிய சுகவீனமுற்ற போது ஜனாதிபதி ஒரு தடவையேனும் பார்வையிடவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி ஜனநாயகக் குழு உறுப்பினர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

எனினும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கருஜயசூரியவைப் பார்வையிடச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனநாயகக்குழு உறுப்பினர்கள் மீண்டும் கட்சியில் இணையக் கூடும் என குறித்த சிங்கள இணையத்தளம் தனது முதன்மைச் செய்தியில் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: