புதன், 15 அக்டோபர், 2008

சேதமடைந்த பாலம் திருத்தப்பட்டதையடுத்து வன்னிக்கு உணவுலொறிகள் சென்றன




புளியங்குளத்தில் சேதமடைந்த பாலம் திருத்தியமைக்கப்பட்டதையடுத்து அப்பகுதியில் தரித்து நின்ற 20 லொறிகளும் நிவாரணப்பொருட்களுடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை சென்றடைந்துள்ளன.

அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரின் பணிப்புரைக்கு அமைய கிளிநொச்சிக்கு 12 லொறிகளும் முல்லைத்தீவுக்கு 8 லொறிகளும் சென்றுள்ளன.

வவுனியா இணைப்பதிகாரியின் வேண்டுகோளின் பிரகாரம் புளியங்குளம், நெடுங்கேணி, ஒட்டுசுட்டான் ஊடாக செல்வதற்காக திங்கட்கிழமை புறப்பட்ட லொறிகள் புளியங்குளம் சந்தியிலிருந்து நெடுங்கேணி பக்கமாக சுமார் ஒரு கிலோமீற்றரிலுள்ள பாலமொன்றின் ஊடாக இரு லொறிகள் கடந்த நிலையில் பாரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து லொறிச் சாரதிகளும் உதவியாளர்களும் கற்களால் பாலத்தில் ஏற்பட்ட வெடிப்பை நிரப்பி ஒரு லொறியும் திணைக்களத்துக்கு சொந்தமான வாகனங்கள் நான்கும் பாலத்தை கடந்த நிலையில் மற்றுமொரு லொறி கடக்க முற்பட்டபோது பாலம் உடைந்து வீழ்ந்துள்ளது.

இதனையடுத்து நேற்று முன்தினம் இந்த லொறிகள் மேற்படி மாவட்டங்களுக்கு செல்லமுடியாது திங்கள் இரவு முதல் 20 லொறிகளும் அங்கு தரித்து நின்றன.

இந்நிலையில் வவுனியாவிலும் முல்லைத்தீவிலும் மேற்படி பாலத்தை திருத்துவதற்கு வீதி அதிகார சபையினர் சென்று புனரமைப்பு வேலைகளை மேற்கொண்டனர்.

திருத்த வேலைகள் நேற்று நண்பகல் முடிவுற்ற நிலையில் தரித்து நின்ற 20 லொறிகளும் பிற்பகல் 4 மணியளவில் இரு மாவட்டங்களையும் சென்றடைந்ததாக அந்தந்த மாவட்ட அரச அதிபர்கள் தெரிவித்தனர்

கருத்துகள் இல்லை: