திங்கள், 13 அக்டோபர், 2008

கிழக்கு தொடர்பில் பேச பசில் ராஐபக்சவுக்கு எந்தவித உரிமையும் கிடையாது: த.தே.கூ. கண்டனம்



மகிந்தவின் சகோதரர் பசில் ராஐபக்சவுக்கு இலங்கையின் கிழக்கு வாழ் தமிழ் மக்கள் தொடர்பில் பேசுவதற்கு எந்தவித உரிமையும் கிடையாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை (12.10.08) வெளியிட்டுள்ள அறிக்கை:

கிழக்கு மாகாண மக்கள் தமது அரசியல் மற்றும் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் இருந்து என்றுமே தளர்ந்தவர்கள் அல்லர். அவர்கள் எந்தவொரு சலுகைகளுக்கும் சோரம் போபவர்களும் கிடையாது. ஆனால் சிங்கள பேரினவாத அரசைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும் அரச தலைவரின் ஆலோசகருமான பசில் ராஐபக்ச தெரிவித்துள்ள கருத்து ஒட்டுமொத்த கிழக்கு தமிழ் மக்களைப் புண்படுத்தும் செயலுடன் அவர்களைக் கொச்சைப்படுத்துவதுமாகும்.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே தமிழ் மக்களினால் தெரிவு செய்யப்பட்டவர்கள். அவர்களுக்கு மட்டுமே அம்மாகாணத்தின் தமிழ் மக்கள் தொடர்பாக பேசுவதற்கான உரிமை உண்டே தவிர அமெரிக்காவின் குடியுரிமை பெற்றவரும் தென்பகுதியில் மக்களினால் தெரிவு செய்யப்படாத அரசியல்வாதியுமான மகிந்தவின் சகோதரர் பசில் ராஐபக்சவுக்கு கிழக்கு மக்கள் தொடர்பில் பேசுவதற்கு எந்தவித உரிமையும் கிடையாது.

அண்மைக்காலத்தில் கிழக்கில் நடைபெற்ற உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் எவ்வாறு நடைபெற்றன என்பது அங்குள்ள மக்களுக்கு மாத்திரமல்லாமல் உலகமே அறிந்த விடயம். அத்தேர்தல்கள் ஐனநாயக விரோதமான முறையிலேயே நடைபெற்றன.

ஆனால் கருணாவை நாடாளுமன்ற உறுப்பினராக்கியது கிழக்கு மக்களல்ல. அம்மக்களுக்கு இதில் எந்தவித சம்பந்தமுமில்லை. அரசு தனது பொய்ப் பிரச்சாரத்திற்காக கருணாவை தேசிய பட்டியல் மூலமாக நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்தது.

இதனை வைத்துக்கொண்டு கிழக்கு மக்களுக்கு தேசிய ரீதியில் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஐபச்ச கூறுவது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் கதையாகும். இதன் மூலம் கிழக்கு மக்களை ஏமாற்றி விடலாம் என யாரும் நினைத்தால் அது தப்புக்கணக்காகும்.

இப்பொழுது கிழக்கில் என்ன நடைபெறுகின்றது? கிழக்கில் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்குப் பின்னர் தினமும் கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், கைது, சுற்றிவளைப்பு, சோதனை, பாலியல் வல்லுறவு, கப்பம், காவல் நிலையத்தில் தடுத்து வைப்போர் கொலை செய்யப்படுதல், தமிழ்- முஸ்லிம் உறவைச் சீர்குலைத்தல் போன்ற சம்பவங்களே அதிகரித்த வண்ணம் உள்ளன.

இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஐபக்ச கூறும் பதில் என்ன? கிழக்கு மக்கள் படையினரினதும் மற்றும் ஆயுதக்குழுவினரினதும் நடவடிக்கைகளினால் மிகவும் வேதனையுடனும் துன்பத்துடனும் தமக்கு நடப்பவற்றை வெளியில் கூறமுடியாதவாறு அரச பயங்கரவாதத்தினால் அடக்கப்பட்டுள்ளனர். இதுவே கிழக்கின் தற்போதைய யதார்த்தமாகும்.

கிழக்கு மக்கள் என்றுமே பேரினவாத அரசை நம்பப்போவதில்லை. இதுதான் கடந்த கால வரலாறு. தமிழ் மக்கள் இணைந்த வடக்கு-கிழக்கே தமிழர் தாயகம் என்பதில் உறுதியுடன் உள்ளனர். அதில் எந்தவித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை.

இதனை நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஐசக்ச புரிந்து கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: