புதன், 15 அக்டோபர், 2008

சகீர்கான் ஹாடின் புதிய சர்ச்சை உருவெடுக்கிறது




நடந்து முடிந்த பெங்களூர் டெஸ்ட் போட்டியில் 3 ஆம் நாள் ஆட்டத்தில் சகீர்கான் துடுப்பெடுத்தாடிய போது இவருக்கும் அவுஸ்திரேலிய விக்கெட் காப்பாளர் பிரட் ஹாடினுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பிரட் ஹாடின் சகீர் கானை வசை பாடினாரா என்ற சர்ச்சை கிளம்பியுள்ளது.

ஆனால், இரு அணி வீரர்களும் இந்தச் சம்பவத்தை மூடி மறைக்கின்றனர். சனிக்கிழமையன்று மழை காரணமாக இரு அணிகளும் பெவிலியன் திரும்ப வேண்டியிருந்தது. அப்போது சகீர் கான் ஆஸி.விக்கெட் காப்பாளர் ஹாடினுடன் சூடான வாதத்தில் ஈடுபட்டது தொலைக்காட்சியில் காட்டப்பட்டது.

கடந்த ஆஸி. தொடரின் போதும் இது போன்ற விவகாரங்களை ஊடகங்கள் ஊதிப் பெருக்கியதன் மூலம் தொடரே போர்க்களமாக இருந்தது. இதனால் இம்முறை இரு அணிகளும் இந்த விவகாரத்தைப் பற்றி பேச மறுத்துள்ளன.

ஆனால் சகீர்கான் ஹாடினின் வாயை மூடிக்கொண்டிருக்குமாறு கூறியதாக போட்டியை ஒளிபரப்பிய நியோ ஸ்போர்ட்ஸ் சனலுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன் பிறகே சகீர்கான் அதிரடி முறையில் ஆடி 57 ஓட்டங்களை எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமலிருந்ததோடு, ஹர்பஜனுடன் இணைந்து போட்டியை ஆஸி.யின் பிடியிலிருந்து வெளியே கொண்டு வந்தார்.

இந்த சம்பவத்தின் போது பொண்டிங், சகீர்கானை சமாதானப்படுத்தியுள்ளார். மேலும் சகீர்கான், ரிக்கி பொண்டிங்கிடம் ஆஸி.வீரர்களை கட்டுப்படுத்துமாறு கேட்டுக் கொண்டதாகவும் நியோஸ்போர்ட்ஸிற்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்ததாக அவுஸ்திரேலிய பத்திரிக்கை ஒன்று கூறுகிறது.

கில்கிறிஸ்டின் நிரப்ப முடியாத இடத்திற்கு வந்துள்ள பிரட் ஹாடின் இந்த முதல் டெஸ்ட் போட்டியில் 23 ஓட்டங்களை ""பை'களாக விட்டுக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சகீர்கான், தனது ஆட்ட நாயகன் விருதைப் பெறும்போது, இவ்வளவு பாதுகாப்பு உத்தியுடன் ஆடும் அவுஸ்திரேலிய அணியை தான் சந்தித்ததில்லை என்றும், டெஸ்ட் போட்டியின் இரண்டு இனிங்சிலும் இந்தியாவை அவர்களால் சுருட்ட முடியாது என்று தடுப்பு உத்தியை கடைபிடித்தனர் என்றும், சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டுமல்ல அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் கூட விக்கெட்டுகளை வீழ்த்த சிரமப்படுகின்றனர் என்றும், தன்னையும், ஹர்பஜனையும் வீழ்த்த திணறினர் என்றும் கூறியுள்ளமை எரியும் நெருப்பில் எண்ணெய் விடுவதாக அமைந்துள்ளது.

கருத்துகள் இல்லை: