புதன், 15 அக்டோபர், 2008

வன்னி மக்களுக்கு பிரித்தானியா நிவாரண உதவிகளை வழங்கவுள்ளது



இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை பிரித்தானியா வழங்கவுள்ளது. இதேவேளை யுத்தத்தினால் இடம்பெயர்ந்தோர்களுக்காக ஐக்கிய நாடுகள் சபையின் முழுமையான நடவடிக்கைகள் தேவை என பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இலங்கையில் சுமார் ஐந்து லட்சம் பேர் உள்ளக இடப்பெயர்வுகளுக்கு உட்பட்டுள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற தனிநபர் விவாதம் ஒன்றில் பங்கேற்ற சர்வதேச அபிவிருத்திதுறை அமைச்சர் மைக்கல் போஸ்டர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அத்துடன் இலங்கையின் வடக்கில் மாத்திரம் 220 ஆயிரம் பேர் உள்ளக இடப்பெயர்வுக்கு உள்ளாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதில் 30 ஆயிரம் பேர் ஐந்து தடவைகள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வன்னியில் மழைக்காலம் ஆரம்பித்துள்ளமையால், இடம்பெயர்ந்த மக்கள் பாரிய பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்தநிலையில் பிரித்தானிய அரசாங்கம் இலங்கையின் வடக்கில் ஏற்பட்டுள்ள பட்டினியை போக்க உடனடியான நிவாரணங்களை அங்கு அனுப்பும் என தெரிவித்தார். இலங்கையின் இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு ஒன்று சாத்தியமாகாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆளும் தொழில்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோயான் ரெயன்னின் கோரிக்கையின் பேரிலேயே இந்த விவாதம் நடைபெற்றது.

இதன் போது கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் பாரி காடினர், இலங்கையின் இராணுவத் தளபதி, இலங்கை சிங்களவர்களுக்கு சொந்தமானது எனக் குறிப்பிட்டுள்ளமை குறித்து தமது அதிருப்தியை வெளியிட்டார். இந்தநிலையில் பிரித்தானிய அரசாங்கம் தன்னார்வு நிறுவனங்களுக்கு பணியாற்றுவதற்கான அனுமதியை வழங்கவேண்டும் என இலங்கை அரசாங்கத்திடம் கோரவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார் யுத்தத்தில் சம்பந்தப்பட்டுள்ள அனைத்து தரப்பினரும் சர்வதேச நியதிகளை பின்பற்றவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதேசங்களில் சுதந்திரமான கருத்துக்களுக்கு இடமில்லை என அவர் குற்றம் சுமத்தினார். தமிழீழ விடுதலைப் புலிகள், சமாதானத்தில் சாதகமான நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் என கோரிய அவர், பிரித்தானிய அரசாங்கம்,சிறுவர்கள் படைகளில் சேர்க்கப்படுவதை தடுக்குமாறு கோரிக்கை விடுக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதேவேளை இலங்கையின் தென்பகுதியிலும் ஊடகவியலாளர்களுக்கு சுதந்திரம் இல்லையென்றும் ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதாகவும் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த சில வருடங்களில் கொல்லப்பட்டுள்ளதாகவும் போஸ்டர் சுட்டிக்காட்டினார்.

கருத்துகள் இல்லை: