ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் நீட்டியுள்ள நேசக்கரம் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று சுவிசிலிருந்து வெளிவரும் "நிலவரம்" மாதமிருமுறை ஏட்டின் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
இது தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை (10.10.08) வெளிவந்த ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழர் தாயகத்தில் நடைபெற்று வரும் சிங்கள ஆயுதப்படைகளின் வல்வளைப்பு நடவடிக்கைகளால் இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் இடம்பெயர்ந்து உணவின்றி, மருத்துவ வசதி இன்றி, தங்குவதற்கு ஒழுங்கான இடமின்றி, மரநிழலிலும் வான்குண்டு வீச்சுக்கும் எறிகணை வீச்சுக்கும் அஞ்சி பதுங்கு குழிகளிலும் வாழ நிர்ப்பந்திக்கப் பட்டுள்ள நிலையில் தாய்த் தமிழகத்தில் எழுப்பப்பட்டு வரும் ஆதரவுக்குரல்களும், ஒருமைப்பாட்டுச் செயற்பாடுகளும் தென்பை ஏற்படுத்தி வருகின்றன. ஆரம்பத்தில், ஈழ ஆதரவாளர்களும் சிறிய கட்சிகளுமே களத்தில் குதித்திருந்த நிலையில் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு இந்திய பொதுவுடமைக் கட்சி, மாநிலத்தில் ஆளும் தி.மு.க. ஆகியவையும் களத்தில் இறங்க வேண்டிய சூழலைத் தோற்றுவித்துள்ளது. அடுத்த வரும் நாட்களில் முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும் களத்தில் இறங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஈழத் தமிழர் விவகாரத்தில் மதில் மேல் பூனையாக இதுவரை இருந்து வந்த தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி கடந்த 6 ஆம் நாள் மயிலையில் நடாத்திய தன்னிலை விளக்க மாநாடு, தொடக்கி வைத்த தந்தி அனுப்பும் இயக்கம் ஆகியவை உடனடியாகவே ஓரளவு விளைவைத் தந்துள்ளன. கலைஞர் கருணாநிதியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் பேசியதுடன் இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், இந்தியாவுக்கான சிறிலங்காவின் பிரதித் தூதுவரை நேரில் அழைத்து தமது அரசாங்கத்தின் ஆட்சேபணையையும் தெரிவித்துள்ளார். இதனால் ஏதும் நன்மை விளைகிறதோ இல்லையோ, இந்த விடயத்தில் தமிழ்ப் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என்றொரு கோணமும் இருக்கின்றது என்ற விடயம் வெளிப்படுத்தப்பட்டு நிற்கிறது. இதற்காக கருணாநிதி அவர்களுக்கு நாம் நிச்சயம் பாராட்டுத் தெரிவிக்கலாம். ஆனால் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் உறுதிமொழியும், சிறிலங்கா பிரதித் தூதுவரிடம் தெரிவிக்கப்பட்ட ஆட்சேபணையும் வெறும் கண்துடைப்பா அல்லது எதிர்காலத்தில் எடுக்கப்படப்போகும் காத்திரமான நடவடிக்கைகளுக்கு கட்டியம் கூறும் வியடங்களா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தமிழக உறவுகள் மனதில் ஈழத்தமிழ் மக்களின் துயரம் பலத்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது தினமணி நடாத்திய கருத்துக்கணிப்பு மூலம் தெரிய வந்துள்ளது. கருத்துக்கணிப்பில் பங்குபற்றிய 80.8 வீதமான மக்கள் ஈழத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்களப் படைகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் படை நடவடிக்கைகளைக் கண்டித்துள்ளதுடன் சிங்களப் படைகளுக்கு இந்தியா ஆயுத உதவி வழங்குவதையும் ஆட்சேபித்துள்ளனர். இந்தக் கருத்துக் கணிப்பு முடிவு தமிழகத் தமிழ் மக்களின் மன உணர்வைப் பிரதிபலிக்கும் அதேவேளை, சுப்பிரமணிய சுவாமி, சோ.இராமசாமி போன்ற தமிழின விரோத, பார்ப்பனச் சிந்தனையாளர்களின் பொய்ப் பிரசாரங்களையும் முறியடிப்பதாக அமைந்திருந்தது. ஈழத் தமிழர் துயரம் தொடர்பில் தமிழகத்தில் உருவாகியுள்ள உணர்வலைகள் பற்றி பி.பி.சி. தமிழ்ச் சேவை அண்மையில் சோ இராமசாமி அவர்களைச் செவ்வி கண்டிருந்தது. இதன்போது அவர் "ஈழத் தமிழ் மக்கள் இராணுவ நடவடிக்கைகளால் பாதிக்கப்படுவது தொடர்பாக தமிழக மக்கள் கவலை கொண்டுள்ள அதேநேரம், இராணுவ நடவடிக்கைகள் தமிழ் மக்களுக்கு எதிராக அல்ல மாறாக விடுதலைப் புலிகளுக்கு எதிராக மாத்திரமே எடுக்கப்பட்டு வருகின்றன என்பதைத் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கின்றார்கள்" எனத் தெரிவித்திருந்தார். தமிழ் நாட்டில் எத்தனையோ ஆய்வாளர்கள் இருக்கத் தக்கதாக சோ.இராமசாமியை ஏன் பி.பி.சி. தேர்ந்தெடுத்தது என்பது அவர்களுக்கு மாத்திரமே தெரிந்த விடயம். எதுவாக இருந்தாலும், கலைஞர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களும் தமிழின ஆதரவாளர்களும் எடுத்த நடவடிக்கைகள் பாராட்டப்பட வேண்டியவையே. சக மனிதன் துயரத்தில் இருக்கையில் நேசக்கரம் நீட்டுவது சகோதரத்துவத்தின் வெளிப்பாடு. அது தேவையான வேளையில் நீட்டப்பட்டுள்ளது. அது இன்றுள்ள துயரச் சூழல் மாறுவதோடு முடிந்து போகாமல் என்றென்றும் நீடிக்க வேண்டும் என்பதே ஈழத் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
திங்கள், 13 அக்டோபர், 2008
தமிழகத்தின் நேசக்கரம் தொடர்ந்து நீடிக்க வேண்டும்: "நிலவரம்" ஏடு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் நீட்டியுள்ள நேசக்கரம் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று சுவிசிலிருந்து வெளிவரும் "நிலவரம்" மாதமிருமுறை ஏட்டின் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக