வியாழன், 16 அக்டோபர், 2008

ஐரோப்பிய ஒன்றிய கட்டளைகளுக்கு அடிபணிய முடியாது: ஜனாதிபதி. தமிழக கோரிக்கை ஏற்க முடியாதது: அரசாங்கம்.



ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டளைகளுக்கு அடிபணிய வேண்டிய அவசியமில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டத்தைப் பெற்றுக் கொள்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் சகல நிபந்தனைகளுக்கும் கட்டுப்படத் தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜீ.எஸ்.பி. சலுகைத் திட்டத்தை வழங்குவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு விசாரணைகளுக்கும் அனுமதியளிக்க வேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸீற்கு உத்தரவிட்டுள்ளார்.

சலுகைத் திட்டத்தை வழங்குவது தொடர்பில் மனித உரிமைகளைப் பேணுதல், சித்திரவதைகள், சிறுவர் பாதுகாப்பு போன்ற காரணிகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் அதிக கவனம் செலுத்தும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மனித உரிமைக்காக குரல் கொடுக்கும் இந்த அமைப்புக்கள் ஒருபோதும் பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பது பற்றி கரிசனை கொள்ளவில்லை என ஜனாதிபதி ஐரோப்பிய ஒன்றியம் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜீ.எஸ்.பி. சலுகைத் திட்டத்தைப் பெற்றுக் கொள்வதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளுக்கு இலங்கை அரசாங்கம் அடிபணியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

சலுகைத் திட்டம் மறுக்கப்படுவதன் மூலம் ஏற்படும் இழப்புக்களை ஈடுசெய்வதற்காக லத்தின் அமெரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் காணப்படும் சந்தை வாய்ப்பை விரிவுபடுத்த முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

வன்னியில் பணியாற்றி வந்த சில அரச சார்பற்ற நிறுவனங்கள் கடமைகளிலிருந்து விலகி சர்வதேச சமூகத்தில் இலங்கை தொடர்பான ஓர் மோசமான பிம்பத்தை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்வதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அமெரிக்கா போன்ற நாடுகளில் இடம்பெறும் பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்து எவரும் குரல் கொடுப்பதில்லை என தொழில் அமைச்சர் அதாவுட செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் போன்ற ஓர் வலுவான அமைப்பை முதன் முறையான இலங்கைத் தலைவர் ஒருவர் கடுமையாக விமர்சித்துள்ளமை அரசியல் வட்டாரத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

இறையாண்மை உள்ள நாடு - இராணுவ நடவடிக்கைளை நிறுத்த தமிழக அரசியல்வாதிகளுக்கு முடியாது:

நாட்டின் ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட முப்படைத் தளபதிகளை அழிப்பதற்கு பிரபாகரன் தற்கொலையாளிகளை அனுப்பியுள்ள நிலையில் தமிழக முதலமைச்சர் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அரசியல்வாதிகளுக்கு தேவையான வகையில் வன்னி இராணுவ நடவடிக்கையை நிறுத்தவும் போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தவும் தயாரில்லை என இலங்கை அரசாங்கம் நேற்று (15 10 2008) இந்திய அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது.

இரண்டு வாரத்திற்குள் வன்னிப் படை நடவடிக்கைளை நிறுத்தி, போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என இந்தியா இலங்கைக்கு உத்தரவிடவேண்டும் என தமிழக முதல்வர் மு. கருணாநிதி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற சர்வக்கட்சி மாநாட்டில், இந்திய பிரதமரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்குப் பதிலாகவே, இலங்கை அரசாங்கம் இதனை இந்தியாவுக்கு அறிவித்துள்ளது.

புலிகளின் புலனாய்வுத் துறைத் தலைவர் பொட்டம்மான் கரும்புலிகள் 10 பேரை கொழும்புக்கு அனுப்பியுள்ள நிலையில், அந்த நடவடிக்கையை இலகுவாக்கும் நோக்கில், இந்த போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரப்படுகிறதா எனவும் இலங்கை இந்திய ஆட்சியாளர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

இலங்கை இறையாண்மை உள்ள ஒரு நாடு எனவும் இலங்கையின் இராணுவ நடவடிக்கைளை நிறுத்த தமிழக அரசியல்வாதிகளுக்கு முடியாது எனவும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

வன்னி இராணுவ நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான மருந்து, உணவு உள்ளிட்ட அத்தியவசிய பொருட்களை 20 சுமை ஊர்திகளில் அனுப்பி வைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க படையினர் உரிய நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளனர் எனவும் இலங்கை அரசாங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

விடுதலைப்புலிகள், இலங்கை அரசு மற்றும் படையினருக்கு எதிராக சூழ்ச்சிகரமான பிரசாரத்தினை மேற்கொண்டு வரும் நிலையில் அதில் சிக்கி கொள்ள வேண்டாம் என இலங்கை அரசு இந்திய ஆட்சியாளர்களை கேட்டுக் கொண்டுள்ளது.

கருத்துகள் இல்லை: