வியாழன், 16 அக்டோபர், 2008

கிளிநொச்சியில் மக்கள் அவலம் - கடந்த ஒரு வாரகாலத்தில் 120 பேர் பாம்புக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்




கிளிநொச்சி தர்மபுரத்தில் இயங்கிவரும் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கடந்த 7 நாட்களில் மாத்திரம் 120 பேர் பாம்புக் கடிக்கு உள்ளாகிய நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

53 வயதான பெண் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவல்களை மாகாண உதவி சுகாதாரப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி பி பிரைட்டன் தெரிவித்துள்ளார்.

பாம்புக்கடி மற்றும் வயிற்றோட்டம் ஆகியவற்றுக்கான மருந்துப் பொருட்களை ஏற்றிய மூன்று பார ஊர்திகள் ஓமந்தை சோதனைச் சாவடியின் ஊடாக இன்னும் வன்னிக்கு வந்து சேரவில்லை.

அத்துடன், வவுனியாவுக்கு நோயாளிகளை அம்புலன்ஸ் வாகனங்களில் அனுப்புவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.13 நாள் குழந்தை ஒன்றுக்கு ஏற்பட்ட நோயை அடுத்து அதனை வவுனியாவுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுத்தபோதும் அது தோல்வியடைந்த நிலையில் குழந்தை உயிரிழந்துள்ளது.

இடம்பெயர்ந்துள்ள கிளிநொச்சி வைத்தியசாலையில் 300 நோயாளிகள் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர்.வெளிநோயாளர் பிரிவுக்கு சுமார் 800 தொடக்கம் 1200 பேர் வரை வந்து செல்கின்றனர். நோயாளிகள் தங்கி சிகிச்சைபெற போதிய வசதியின்மையால், வைத்தியசாலையின் தரைகளிலும் நடைபாதைகளிலும் தங்கியுள்ளனர்.

புளியம்பொக்கணை, விஸ்வமடு மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களுக்கு மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். குடிநீருக்குப் பாரிய தட்டுப்பாடு நிலை ஏற்பட்டுள்ளது. இடம்பெயர்ந்தோரில் 95 வீதமானோருக்கு உரிய கழிப்பறை வசதிகள் இல்லை என தன்னார்வு நிறுவனத் தரப்புகள் தெரிவித்துள்ளன.

இடம்பெயர்ந்துள்ளவர்களில் 50 பேருக்கு ஒருவருக்கு வயிற்றோட்ட நோய் ஏற்பட்டுள்ளது. இடம்பெயர்ந்தோருக்கான குடிநீர் விநியோகத்தில் 5 தண்ணீர் பௌசர்களே ஈடுபட்டு வருகின்றன. பெரும்பாலான மக்களுக்கு எக்ஸிமா தோல் நோய்கள் ஏற்பட்டுள்ளன. அத்துடன் நீர் தொடர்பான நோய்களும் தொற்றியுள்ளன.

நாளொன்றுக்கு 10 க்கும் மேற்பட்ட வாகன விபத்துக்கள் இடம்பெறுகின்றன. அண்மையில், வாகன விபத்தினால் சிறுமி ஒருவர் பலியானார்.

மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் கிளிநொச்சிக்கு சுமார் 10 ஆயிரம் கூடாரங்கள் தேவைப்படுவதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: