வெள்ளி, 10 அக்டோபர், 2008
கருணாவின் நியமனம் சட்ட விரோதம் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தால் ரட்ணசிறி, மேர்வின், டளஸ், பசில் - கதி என்ன?
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலில் பெயர் குறிப்பிடப்படாத கருணாவை தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்தமைக்கு எதிராக ஜே.வீ.பீ தாக்கல் செய்துள்ள மனுவின் அடிப்படையில் நியமனம் சட்டவிரோதமானது என நீதிமன்றம் அறிவித்தால், தேசியப்பட்டியலில் பெயர் குறிப்பிடாத நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, அமைச்சர்களான மேர்வின் சில்வா, டளஸ் அழகபெரும மற்றும் பசில் ராஜபக்ஸ, ஆகியோரின் பதவிகளும் பறிபோகும் நிலையேற்படலாம் எனக் கருதப்படுகிறது.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளன. இதற்குப் பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர் ஊடத்துறை அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்பா, இந்த விடயம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளதால், அது குறித்து தான் எதனையும் கூற முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பிரதம நீதியரசர் சரத் என் சில்வா நிறைவேற்று அதிகாரத்தை முறைக்கேடாகப் பயன்படுத்த முடியாது எனக் கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரணதுங்கவின் வோட்டர் ஹெச் கொடுக்கல் வாங்கல்களை ரத்துச் செய்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக் குறித்து, அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என ஊடகவியலாளர் மாநாட்டில் கேள்வி எழுப்பபட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்பா, நீதிமன்றத்தின் தீர்ப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாகவும் அது ஜனநாயக நாட்டின் வெளிப்பாடு எனவும் தெரிவித்தார்.
அத்துடன் ஜே.வீ.பீயின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் கருணாவை நியமித்தது எந்தளவுக்கு நியாயமானது எனவும் அமைச்சரிடம் கேள்வி எழுப்பபட்டது. இதற்குப் பதிலளித்த அமைச்சர். நீதிமன்றத்தில் உள்ள விடயம் தொடர்பில் தான் எதனையும் கூறப்போவதில்லை எனக் குறிப்பிட்டார். எனினும் ஊடகவியலாளகளிடம் இருந்து தொடர்ந்தும் இவ்வாறான கேள்விகள் எழுப்பப்பட்டன.
ஜானக்க பெரேராவின் கொலை தொடர்பில் அரசாங்கம் யாரை சந்தேகிக்கிறது எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் விடுதலைப்புலிகளைத் தவிர வேறு யார், வேறு எவரிடம் தற்கொலை குண்டுதாரிகள் உள்ளனர் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். ரி.எம்.வீ.பீயிடம் தற்கொலை குண்டுதாரிகள் இருக்கின்றனர் தானே, அவர்களைச் சந்தேகிக்க முடியாதா? ஏனக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்த அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்பா இதனை முழுமையாக நிராகரிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக