புதன், 15 அக்டோபர், 2008

விடுதலைப்புலிகளை ஒழிக்கமுடியாது என்ற பேச்சை நாம் தகர்த்துள்ளோம் - மகிந்த



விடுதலைப் புலிப்பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாதென்றும், நிபந்தனைகளுக்கு கட்டுப்படாமல் வெளிநாட்டுக் கடன்களை பெறமுடயாதென்றும் கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட விவாதங்கள் எமது அரசாங்கத்தால் தகர்க்கப்பட்டுள்ளது. சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் ஆகிய அனைத்து மக்களுக்கும் இந்த நாட்டில் சம உரிமைகள் உண்டு என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஆசிரியர்கள் ஆயிரம் பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை அலரிமாளிகையில் இடம்பெற்ற போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் கூறியுள்ளதாவது:

பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாதெனக் கூறி அதற்கான எந்தவொரு முயற்சியையும் முன்னெடுக்காது உடன்படிக்கைகளைச் செய்துகொண்டு வடக்கையும் கிழக்கையும் பயங்கரவாதிகளிடம் கையளித்திருந்தனர். ஆனால், எமது நாடு தீர்க்கமான காலகட்டத்தில் உள்ளதென்பதை அனைவரும் மனதில் கொள்ளவேண்டும்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு அல்லது அம்பாந்தோட்டை போன்ற பிரதேசங்களாகட்டும், அங்கு வாழ்பவர்கள் சிங்களவர்களாகட்டும், தமிழர்களாகட்டும், முஸ்லிம்களாகட்டும் அல்லது பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களாகட்டும், இவர்கள் அனைவரும் எமது நாட்டுப் பிரஜைகள்.

இங்கு வாழும் அனைவருக்கும் அனைத்து சம உரிமைகளும் உண்டு. அனைத்து பிள்ளைகளுக்கும் கல்வி கற்கும் உரிமையும் உண்டு. அனைத்து மக்களும் அச்சமின்றி சந்தேகமின்றி வாழும் சூழலை ஏற்படுத்துவதன் மூலமே இதனை வெற்றிகொள்ள முடியும். வெளிநாடுகளில் கடன்பெறுவதற்கு நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டுமெனத் தெரிவித்து கடந்த காலங்களில் கைவிடப்பட்ட பல அபிவிருத்தித் திட்டங்களை நாம் வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றோம்.

தேவையிருந்தால், அர்ப்பணிப்பு இருந்தால் அனைத்தையும் நிறைவேற்ற முடியுமென்பதை நிரூபித்துள்ளோம். கிராமங்களில் ஆங்கிலத்தைக் கற்பிக்க முடியாதென்ற மாயையைத் தகர்த்தெறிந்து முடியுமென இன்று நிரூபித்துள்ளோம் என்றார்.

கருத்துகள் இல்லை: