புதன், 15 அக்டோபர், 2008

சூரிய ஒளியில் இயங்கும் சைக்கிள் லண்டனில் கண்டுபிடிப்பு




சூரிய ஒளிமூலம் மணிக்கு 24 கிலோ மீற்றர் வேகத்தில் செல்லும் துவிச்சக்கர வண்டியை லண்டனைச் சேர்ந்த வடிவமைப்பாளர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

பிரிட்டனிலுள்ள சட் அன்ட்கோ நிறுவனத்தின் வடிவமைப்பாளராக பணியாற்றி வரும் மிரோஸ்லாவ் மில்ஜிவிக்கே இத் துவிச்சக்கர வண்டியினைக் கண்டுபிடித்துள்ளார்.

பயணத்தை ஆரம்பிக்கும் போது மட்டும் பெடலினை மிதிக்க வேண்டும். பின்னர் சூரிய ஒளியில் இருந்து சேகரிக்கப்படும் மின்சாரம் சைக்கிளின் பின்பகுதியில் உள்ள பற்றரியில் சேகரிக்கப்பட்டு விடும். அதைத் தொடர்ந்து மோட்டார் மூலம் சைக்கிள் இயங்கத் தொடங்கிவிடும். அலுவலகத்தில் நிறுத்தப்பட்டு இருக்கும் போது சைக்கிள் தானாகவே சூரிய ஒளி மூலம் மின்சாரத்தைச் சேகரித்துக் கொள்கிறது. பற்றரி மின்சாரம் தீரும் வரை மாலையில் சைக்கிளை இயக்க முடியும். இதில் பொருத்தப்பட்டுள்ள மெல்லிய சோலார் கலங்கள் கண்ணாடி போலவுள்ளது. இவை திறன் வாய்ந்தவை என்பதால் மேகமூட்டமாக இருந்தாலும் கூட சிறிது சூரிய ஒளி கிடைத்தாலும் அதை மின்சாரமாக மாற்றும் திறன் கொண்டது.

இரவு நேரத்தில் இதைப் பயன்படுத்த வேண்டுமானால் வீட்டில் மின்சாரம் மூலம் சார்ஜ் செய்து கொள்ளலாம். சில மணிநேரத்தில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். செங்குத்தாக உள்ள மலைப்பகுதிகளில் செல்லும் போது லேசாக பெடலை மிதித்தால் போதுமானது. விரைவாக செல்ல முடியும். வழக்கமான சைக்கிள் போல இதன் கைப்பிடி முன்புறம் அமைக்கப்படவில்லை. சைக்கிளின் பின்புறம் பக்கவாட்டுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. சைக்கிளை ஓட்டிச் செல்வோர் வசதியாக சாய்வாக அமர்ந்து செல்லும் வகையில் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மேல்ப் பகுதி மூடப்பட்டது போன்று வடிவமைக்கப்பட்டு இருப்பதால் மழைகாலத்தில் நனையாமல் செல்ல முடியும். முன், பின் பக்கங்களில் இண்டிகேட்டர்களும் முன்பகுதியில் ஹெட் லைட்டும் அமைக்கப்பட்டுள்ளன. இது விலை குறைவானது மட்டுமன்றி சுற்றுச்சூழலுக்கு உகந்தது. தற்போது வடிவமைப்பு நிலையில் மட்டுமே உள்ள இந்த சைக்கிள் முதலீடு கிடைத்ததும் வர்த்தக ரீதியில் மொத்தமாக உற்பத்தி செய்யப்படவுள்ளது. விரைவில் சந்தைக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: