சென்னை: வீடு தாக்கப்பட்ட வழக்கில் ஆஜராகி சாட்சி அளிக்க வேண்டும் என்று நடிகர் வடிவேலுவுக்கு சைதாப்பேட்டை கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது.
சென்னையை அடுத்த சாலிகிராமத்தில் உள்ளது நடிகர் வடிவேலு வீடு. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 12-ந் தேதி, தன் வீட்டுக்கு முன் நிறுத்தப்பட்டிருந்த கார்களை எடுக்குமாறு வடிவேலு கூறினார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், அவரது வீட்டை அடித்து நொறுக்கியது ஒரு கும்பல்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் நடிகர் வடிவேலுவின் உதவியாளர் மாரிமுத்து சாலிகிராமம் போலீசில் புகார் செய்தார்.
வழக்கு பதிவு செய்த போலீசார் தே.மு.தி.கவை சேர்ந்த சதீஷ்குமார், ராதாகிருஷ்ணன் உள்பட 13 பேரைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை சைதாப்பேட்டை பெருநகர 9-வது கோர்ட்டில் நடந்து வந்தது. கடந்த மாதம் 22-ந் தேதி இந்த வழக்கு விசாரணை மாஜிஸ்திரேட்டு பெஞ்சமின் ஜோசப் முன்பு வந்தது.
அப்போது நடிகர் வடிவேலு, மாரிமுத்து, ஞானவேல், சுரேஷ் ஆகியோர் சாட்சியம் அளிக்க கோர்ட்டில் ஆஜரானார்கள். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாரும் வராததால் பிடிவாரண்டு பிறப்பிக்க அரசு தரப்பு வக்கீல் பன்னீர்செல்வம் கூறினார். இதையடுத்து தே.மு.தி.க.வை சேர்ந்த 13 பேரும் ஆஜராகி பிடிவாரண்டை ரத்து செய்தனர்.
வடிவேலுவுக்கு சம்மன்:
இதற்கிடையே இந்த வழக்கு விசாரணை நேற்று மாஜிஸ்திரேட்டு பெஞ்சமின் ஜோசப் முன் வந்தது. அப்போது கோர்ட்டில் சாட்சியம் அளிக்க நடிகர் வடிவேலு உள்பட 4 பேருக்கும் சம்மன் அனுப்ப மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். வழக்கு விசாரணை வருகிற 21-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அப்போது வடிவேலு மீண்டும் சாட்சியம் அளிக்கிறார்.
சமீபத்தில் அவரது வீடு மீண்டும் தாக்கப்பட்ட மற்றொரு வழக்கும் இதே கோர்ட்டில் நடந்து வருகிறது.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக