சென்னை: ஈழத்தமிழர் பிரச்சனையில் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சு வார்த்தை மட்டும் போதாது. அரசு மட்டத்திலும் பேச்சுவார்த்தைகள் தேவை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் ராஜா வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இலங்கை தமிழர் பிரச்சனையில் தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுப்பட்டு நிற்பது வரவேற்கத்தக்கது. இலங்கை தமிழர்கள் தொடர்ந்து விவரிக்க முடியாத கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.
அந்நாட்டு அரசே அவர்கள் மீது யுத்தத்தை தொடுத்து விமானங்கள் மூலமாகவும், தரை வழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் பல்லாயிரக் கணக்கான மக்கள் அகதிகளாகியுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் மருந்து பொருட்கள் கூட கிடைக்க வழியில்லை.
இந்த நிலையில்தான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழகம் தழுவிய அளவில் சர்வ கட்சிகளுடன் இணைந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது. இந்த பிரச்சனை தமிழகம் சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல. இது ஒரு அகில இந்திய பிரச்சனை. எனவே, மத்திய அரசு இதில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்.
ஈழத்தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தனது கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டும். இதற்கு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சு வார்த்தை மட்டும் போதாது. அரசு மட்டத்திலும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும்.
பிரதமர் மன்மோகன் சிங் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு அமெரிக்க அதிபர் புஷ்ஷூடன் பேசி வருகிறார். அதே போல, இலங்கை தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த அந்நாட்டு பிரதமருடன், மன்மோகன் சிங் பேச வேண்டும்.
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதுடன், இந்திய மீனவர்களும் அந்நாட்டு கடற்படையால் தாக்கப்படுகின்றனர். சுட்டுக் கொல்லப்படுகின்றனர். இலங்கையில் போரால் பாதிக்கப்படும் தமிழர்கள் இந்தியாவுக்கு அகதிகளாக வருகிறார்கள்.
இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்க பிரதமர் மன்மோகன் சிங்கும், வெளியுறவுத் துறை அமைச்சரும் தலையிட வேண்டும். கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக