வெள்ளி, 19 செப்டம்பர், 2008

வன்னிக் களமுனைகள் பலவற்றில் புலிகள்-படையினர் உக்கிரச் சமர்!


வன்னிக்களமுனைகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நேற்றும் பல இடங்களில் உக்கிர சமர்கள் இடம்பெற்றுள்ளன.
விடுதலைப் புலிகளின் பகுதிகளைக் கைப்பற்றும் நோக்குடன் இராணுவத்தினர் தொடர்ந்தும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
வன்னேரிக்குளம் பகுதி நோக்கி நேற்றுக்காலை பெருமெடுப்பில் இராணுவம் முன்னேற முயன்றவேளையில் அங்கு இரு தரப்புகளுக்கும் இடையே போர் மூண்டது. ஏறக்குறைய நான்கு மணித்தியாலயங்கள் நடந்த இந்தச் சண்டையில் குறைந்தது 22 படையினர் கொல்லப்பட்டனர். நாற்பதுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என்று விடுதலைப் புலிகள் தெரிவித்தனர்.
இராணுவத்தை சற்றுத்தூரம் முன்னேறவிட்டு, பிறகு எமது படையணிகள் தீவிர முறியடிப்புப் பாய்ச்சலை மேற்கொண்டன. அப்போது உயிரிழந்த தமது சகாக்கள் சிலரது சடலங்களையும் கனரக ஆயுதங்கள் உட்பட பெருந்தொகையான படைப்பொருள்களையும் கைவிட்டுவிட்டு இராணுவத்தினர் தமது பழைய நிலைகளுக்குப் பின்வாங்கி ஓடிவிட்டனர். என்று வன்னியிலுள்ள புலிகளின் முக்கியஸ்தர்கள் தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதல் தொடர்பாக இராணுவத் தரப்பிலிருந்து நேற்றுமாலை வரை எந்தத் தகவல்களும் வெளியாகவில்லை.
இதேவேளை
வன்னி வடிளாங்குளத்தில்...
வன்னி விளாங்குளம் மன்னகுளம் புதூர் பகுதிகளை நோக்கி பெருமெடுப்பில் முன்னேற முயன்ற இராணுவத்தினரை தமது படையணிகள் தீவிர எதிர்த்தாக்குதல் நடத்தி முறியடித்தன என்று விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். இந்தச் சமரில் 10 இராணுவத்தினர் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர் என்றும் புலிகள் தெரிவித்தனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் நகர்வை ஆரம்பித்த படையினர், நேற்றுமுன்தினம் மாலையில் அங்கிருந்து பின்வாங்கி தமது பழைய நிலைகளுக்குச் சென்றனர் என்று புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சமரின்போது இராணுவத்தினர் கைவிட்டுச் சென்ற படைப்பொருள்கள் புலிகளால் கைப்பற்றப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டது.
அக்கராயன் குளத்தில்
நாச்சிக்குடா பகுதியில் உள்ள கரம்பைக்குளம் குளக்கட்டு பகுதியிலும், அக்கராயன் குளம் பிரதேசத்திலும் நேற்றுமுன்தினம் விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற கடும் மோதல்களில் கொல்லப்பட்டுள்ள படையினரின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளதாக இராணுவத் தலைமையகம் நேற்று அறிவித்தது. பெரும் எண்ணிக்கையான படையினர் இதில் காயமடைந்து விட்டனர் எனத் தெரிவித்த இராணுவத் தலைமைப்பீடம், இந்தச் சண்டைகளில் 40 விடுதலைப் புலிகள் இறந்துள்ளனர் எனவும் குறிப்பிட்டது.
அதேவேளை வன்னேரிக்குளம் பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் மோட்டார் மற்றும் விடுதலைப் புலிகள் ஒன்றுகூடும் இடங்களை இலக்குவைத்து நேற்றுமதியம் 12 மணிக்கும், 12.30 மணிக்கும் ஜெற் மற்றும் எம்.ஐ. 24 ரக ஹெலிக்கொப்டர்கள் தாக்குதலை நடத்தின என்று படைத்தரப்பில் அறிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை: