புதன், 18 மார்ச், 2009

பொதுமக்களுக்கு இழப்பின்றி புலிகளுடன் போர்: மகிந்த சமரசிங்கவின் கூற்றை ஏற்க வெளிநாட்டு இராஜதந்திரிகள் மறுப்பு



முல்லைத்தீவில் பொதுமக்களுக்கு பாதிப்புக்கள் இன்றி தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரை சிறிலங்கா படைகள் நடத்தி வருவதாக அந்நாட்டின் அனர்த்த நிவாரண சேவைகள் மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறியதை கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் ஏற்க மறுத்துள்ளனர்.

அமெரிக்க, பிரித்தானிய, பிரான்ஸ், நோர்வே மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கொழும்பில் உள்ள அதிகாரிகள் தரத்திலான இராஜதந்திரிகளை அமைச்சர் மகிந்த சமரசிங்க சந்தித்து தற்போதைய நிலைமைகள் தொடர்பாக எடுத்துக் கூறினார்.

ஆனால், போரில் மக்கள் பாதிக்கப்படுவதாகவும் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் எதுவும் அங்கு இல்லை எனவும் இராஜதந்திரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொழும்பில் நேற்று முன்நாள் திங்கட்கிழமை இரவு நடைபெற்ற சந்திபில் அமைச்சர் மகிந்த சமரசிங்கவுடன் அரச தலைவர் செயலக அதிகாரிகள் சிலரும் கலந்து கொண்டனர்.

ஐக்கிய நாடுகள் சபை, அனைத்துலக செஞ்சிலுவை சங்கம் ஆகியனவற்றின் உதவியுடன் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் நிவாரணங்களை வழங்க வேண்டும் என்றும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சந்திப்பில் கலந்து கொண்ட இராஜதந்திரிகள் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகின்றது.

இச்சந்திப்பு குறித்து அரசாங்கமோ அல்லது கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களோ ஊடகங்களுக்கு எதுவும் தெரிவிக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: