வியாழன், 19 மார்ச், 2009

புதுக்குடியிருப்பு தாக்குதல்களில் காயமடைந்த 125 படையினர் கொழும்பு மருத்துவமனைகளில் அனுமதி

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களில் காயமடைந்த சிறிலங்கா படையினரில் 125 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையிலும் இராணுவ மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மோதல்களில் உயிரிழந்த 78 படையினரின் உடலங்கள் கொழும்பு பொரளையில் உள்ள பிரபலமான இரண்டு மலர்ச்சாலைகளுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

காயமடைந்த படையினரில் பலர் அனுராதபுரம், பொலநறுவை மற்றும் குருநாகல் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பில் இராணுவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

புதுக்குடியிருப்பில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களிலும் மற்றும் வேறு தாக்குதல்களிலும் இதுவரை 610 படையினர் கொல்லப்பட்டும் 700 பேர் வரை காயமடைந்தும் உள்ளதாக விடுதலைப் புலிகள் நேற்று முன்நாள் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ள நிலையில் கடந்த சில நாட்களில் நடைபெற்ற மோதல்களில் 480 படையினர் கொல்லப்பட்டும் 600 பேர் காயமடைந்தும் உள்ளதாக இராணுவ உயர் அதிகாரிகள் மேலும் கூறுகின்றனர்.

அதேவேளையில் புதுக்குடியிருப்பில் விடுதலைப் புலிகளுக்கும் படையினருக்கும் இடையே கடுமையான மோதல் நடைபெற்றுள்ளதாகவும் இரு தரப்புக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன என்றும் நேற்று காலை சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

ஆனால், படையினருக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள் எதனையும் ஊடக மத்திய நிலையம் தெரிவிக்கவில்லை.

கருத்துகள் இல்லை: