வெள்ளி, 13 மார்ச், 2009

கடும் காற்றுடன் கூடிய மழையால் புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தில் உள்ள 50,000க்கும் அதிகமானோர் பாதிப்பு



புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தில் கடும் காற்றுடன் கூடிய மழையினால் 50,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு நிர்கதியாகியுள்ளதுடன் அவர்களின் தற்காலிக குடிசைகளும் அழிவடைந்துள்ளதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 9ம் மற்றும் 10ம் திகதிகளில் வீசிய பலத்த காற்றுடன் கூடிய மழையினால் அண்மையில் வீசிய கடும் காற்றுடன் கூடிய மழையால் புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தில் இடம்பெயர்ந்து தற்காலிக குடில்களில் வாழும் மக்களைப் பெரிதும் பாதித்திருப்பதாகவும் வேறிடம் செல்ல வழியில்லாது இவர்கள் கஷ்டப்படுவதாகவும், இதனால் 50,000க்கும் அதிகமானோர் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தாழ்வான பகுதிகளில் இரண்டு அடி உயரத்துக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது இதனால் குழந்தைகள், வயோதிபர்கள், கர்ப்பணித்தாய்மார் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இரவு வேளையில் கடும் மழை பெய்வதினால் மக்கள் உறக்கமின்றி அலைமோதுவதாகவும் சிலர் மேட்டு நிலங்களை நோக்கி இடம்பெயர்வதாகவும் தெரிவித்தார்.

இயற்கையின் அழிவு ஒரு புறத்தில் இருக்க போதிய உணவு, மருந்து, சுத்தமான குடிநீர் இன்றி வாழ்வதாகவும் அத்துடன் தற்காலிக மலசல கூடமும் சேதமடைந்துள்ளதால் இவர்கள் பெரும் அவலத்துக்கு உள்ளாகியிருப்பதாகவும் டாக்டர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

எனவே உடனடியாக பாதிக்கப்பட்ட இம்மக்களுக்கு 50,000 தற்காலிக குடில்கள் தேவைப்படுவதுடன் தற்காலிக மலசல கூடமும் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டுமென கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் .ரி.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: