ஞாயிறு, 2 நவம்பர், 2008

சம உரிமைக்காகப் போராடும் ஈழத் தமிழர்கள் மீதான யுத்தத்தை உடன் நிறுத்த வேண்டும் - ரஜினிகாந்த்



இலங்கையில் ஈழத் தமிழர்கள் புதைக்கபடவில்லை அவர்கள் அங்கே விதைக்கப்படுகின்றனர் என பிரபல முன்னணி தமிழ்த் திரைப்பட நடிகர் ரஜனிகாந்த் தெரிவித்துள்ளார்.

இன்று சென்னையில் இடம்பெற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் கலந்துகொண்டு உணர்வுபூர்வமாக உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் உரையாற்றும் போது:

இலங்கையில் ஈழத் தமிழர்கள் புதைக்கப்படவில்லை அவர்கள் அங்கே விதைக்கப்படுகின்றனர். இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிறீலங்காப் படையினர் ஆண்மையற்றவர்கள்.

ஈழத் தமிழர்கள் பேசும் தமிழ் மொழி இனிமையானது. அவர்கள் திட்டினாலு் கூட இனிமையாகவே இருக்கும். அவர்கள் சிறீலங்கா அரசின் யுத்த முன்னெடுப்புகளால் புலம்பெயர்ந்து உலகப் பந்து முழுவதும் பரந்து வாழ்ந்து வருகின்றனர். சம உரிமைக்காகப் போராடும் அவர்கள் மீதான யுத்தத்தை சிறீலங்கா அரசு உடன் நிறுத்த வேண்டும்.

நான் சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஒன்றைச் சொல்ல ஆசைப்படுகின்றேன். கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திஇ கொன்று குவித்து வருகிறீர்கள். ஆனால் அவர்களை உங்களால் அழிக்க முடியவில்லையே ஏன்? நீங்கள் ஆண்மையற்றவர்கள் என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்.

சாமானிய சனங்களின் வேதனை கலந்த அந்த மூச்சுக் காற்று பரவிக் கிடக்கும் எந்த நாடும் உருப்படாது. அவர்களின் சாபம் யாரையும் சும்மா விடாது. பெண்கள்இ குழந்தைகளின் உதிரம் அந்த மண்ணில் கொட்டுகிறது. உங்கள் பூமியில் தமிழர்களைக் கொன்று புதைக்கவில்லை. விதைக்கிறீர்கள். அந்த விதை உங்களை வாழ விடாது.

‘நான்' ‘எனது' என்ற அகங்காரத்தை விட்டால் உங்களுக்குத்தான் நல்லது. தங்கள் நாட்டை தமிழர்கள் அடைந்தே தீருவார்கள். பெரிய நாடுகள் இலங்கை அரசுக்கு இதைப் புரிய வைக்க வேண்டும். எனது சார்பில் இலங்கைத் தமிழர்களுக்காக பத்து லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கிறேன் எனக் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

கருத்துகள் இல்லை: