திங்கள், 24 நவம்பர், 2008

நாவற்காடு சிங்கள வைத்தியரை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளே (கருணா குழு) கொலை செய்துள்ளனர்: பொலிஸ்



வவுணதீவு நாவற்காடு கிராமிய வைத்தியசாலை வைத்தியராக கடமையாற்றிய சிங்களவரான பாலித பத்மகுமாரவை கொலை செய்யுமாறு வவுணதீவு மணிக்காட்டில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் (கருணா குழு) அலுவலகப் பொறுப்பாளர் வர்ணனே உத்தரவிட்டார் என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இத்தகவலை இன்றைய லக்பிம செய்தித்தாள் வெளியிட்டுள்ளது.

உயர் பொலிஸ் அதிகாரி ஒருவரின் தகவல்படி. கிழக்கில் தற்போது கருணாவின் 27 அலுவலகங்களும் பிள்ளையானின் 21 அலுவலகங்களும் இயங்குகின்றன.

இந்தநிலையில் வர்ணனின் தலைமையிலான 6 பேரைக்கொண்ட குழுவே கடந்த 16 ஆம் திகதி வைத்தியசாலையில் இந்த தாக்குதலை நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிள்ளையானின் அலுவலகமான இங்கு, ஏற்கனவே கடந்த 10 ஆம் திகதி ஆயுதங்களுடன் தப்பிசெல்ல முயற்சித்தாக கூறப்படும் இரண்டு பேர் வர்ணன் தலைமையிலான குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே, மட்டக்களப்பில் பணியாற்றிய வீதி அபிவிருத்தி திணைக்களத்தைச் சேர்ந்த சிங்கள இளைஞர் ஒருவர் ஒக்டோபர் 21 ஆம் திகதி கொல்லப்பட்டார்.

இதற்கு அடுத்த நாள் வவுணதீவில் உள்ள நீர்வழங்கல் சபை பகுதியில் நடத்தப்பட்ட கைக்குண்டு தாக்குதலில் ஐந்து சிங்கள பணியாளர்கள் காயமடைந்தமையையும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கருத்துகள் இல்லை: