திங்கள், 24 நவம்பர், 2008

பூநகரி வெற்றியை சிங்கள பாடசாலைகளில் கொண்டாட அரசு திட்டம்: நா.உ. துரைரட்ணசிங்கம் குற்றச்சாட்டு



தமிழீழ விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து பூநகரி பிரதேசம் கைப்பற்றப்பட்டதனை சிங்கள பாடசாலைகளில் படையினரை பாராட்டி வெற்றி விழா கொண்டாடுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைரெட்ணசிங்கம் குற்றம் சாட்டியுள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கல்வி உயர்கல்வி அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் தனது நீண்ட உரையில் மேலும் தெரிவித்ததாவது:

2009 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் போருக்கு 177 பில்லியன் ரூபாயை ஓதுக்கியுள்ள அரசாங்கம், கல்விக்கு 27 பில்லியன் ரூபாய்களை மட்டுமே ஒதுக்கியுள்ளது. இது ஏறக்குறைய 6.5 மடங்கு குறைவானது.

அனைத்துலக ரீதியில் கல்வி, பெருளாதாரத்தில் தேசிய உணர்வுகளில் பின்தங்கிய ஒரு தோல்வி கண்ட நாடாக சிறிலங்கா மாறியுள்ளது.

ஒரு இனத்தின் கல்வி வசதி வாய்ப்புக்களை அழித்துவிட்டால், காலகதியில் அந்த இனம் சீரழிந்து விடும். இதனைத்தான் மகிந்த அரசாங்கம் வடக்கு - கிழக்கில் செய்து கொண்டிருக்கின்றது.

வானூர்தி தாக்குதல்களில் சிக்குண்டு கொல்லப்பட்ட பொதுமக்கள் மற்றும் காயமடைந்தவர்களில் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களும், ஆசிரியர்களும் உள்ளடங்குவர்.

இந்நிலையிலேயே இன்று பூநகரி வெற்றி விழாவை பாடசாலைகளில் கொண்டாட மாணவர்களுக்கு ஊக்கம் கொடுக்கப்படுகின்றது.

வடக்கு-கிழக்கு மாகாணத்தில் பலவந்தப்படுத்தியும் இந்த வைபவம் நடந்தேறியிருக்கிறது. இது மாணவர்களை இன ரீதியாக மாசுபடுத்துகின்ற ஒரு செயல்.

இராணுவ நடவடிக்கையினால், கிளிநொச்சி வலயத்தில் 26,168 மாணவர்களும், 754 ஆசிரியர்களும், 395 அலுவலகப் பணியாளர்களும் இடம்பெயர்ந்துள்ளனர்.

இவர்களில் 12,500 மாணவர்கள் இதுவரை எந்தப் பாடசாலைகளிலும் இணையாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் துணுக்காய் கல்வி வலயத்தில் 2,500 மாணவர்களும், கிளிநொச்சி கல்வி வலயத்தில் 10,000 மாணவர்களும் உள்ளடங்குகின்றனர்.

மடு வலயத்தில் 36 பாடசாலைகளில் 33 பாடசாலைகள் முற்றாகப் பாதிப்பட்டுள்ளது. இங்கு கல்வி பயின்ற ஏறக்குறைய 8,000 மாணவர்களும், 175 ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டு கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

இவர்களில் ஏறக்குறைய 1,500 மாணவர்களும் இதுவரை எந்தப் பாடசாலைகளிலும் இணையாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். மடு வலயத்திலிருந்து கடந்த க.பொ.த (உயர்தர) பரீட்சைக்குத் விண்ணப்பித்த மாணவர்களில் 40 சதவீத மாணவர்கள் இடப்பெயர்வுகளினால் பரீட்சைக்குத் தோற்றும் சந்தர்ப்பத்தை இழந்துள்ளனர்.

வானூர்தி தாக்குதல்கள், எறிகணைகளால் மாணவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். பரீட்சை எழுதிக் கொண்டிருந்த வேளையில் கூட இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

யாழ்ப்பாண மாவட்டம் ஒரு காலத்தில் கல்வியில் வளர்ச்சி கண்ட மாவட்டமாக விளங்கியது. அப்போது அந்த வளங்களை தென்பகுதி மாணவர்களும் முழுமையாகப் பயன்படுத்தினர்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த பல அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் அடங்குவர்.

யாழ். குடாநாட்டில் ஏறக்குறைய 120,000 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதே போன்றுதான் மன்னார், வவுனியா மாவட்ட மாணவர்களும் உயிர் பாதுகாப்புக் கருதி படிப்பை இடைநிறுத்திவிட்டு புலம்பெயர்கின்றனர்.

கிழக்கிலும் இதுதான் நிலைமை. திருகோணமலை மாவட்டத்தில் வெருகல், ஈச்சிலம்பற்று பிரதேசங்களில் உள்ள 16 பாடசாலைகளும், மூதூர் கிழக்கில் உள்ள 17 பாடசாலைகளில் 7 பாடசாலைகளும், மூதூரில் இறால்குழி கஜமுகா வித்தியாலயமும் மீள தொடங்கப்பட்டுள்ளது.

இராணுவ நடவடிக்கையினால் சிதைவடைந்த கட்டடங்களிலும், மர நிழல்களிலும், தளபாட வசதிகளும் ஏனைய அடிப்படை வசதிகளின்றி ஆசிரியர் பற்றாக்குறைகளுடன் பெயரளவில் இயங்குகின்றது. இப்பாடசாலைகளிலிருந்த சகல உடைமைகளும் சிதைக்கப்பட்டும், களவாடப்பட்டும் உள்ளது.

மூதூர் கிழக்கில் சம்பூர் பிரதேசம் உயர் பாதுகாப்பு வலயமாகப்பட்டுள்ளதால், அங்கு இயங்கி வந்த 7 பாடசாலைகளும் மீளத் திறக்கப்படாத காரணத்தினால், கல்வி பயின்ற 1,700 மாணவர்கள் பாதிப்புக்கப்பட்டுள்ளனர்.

மீளத் திறக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வாகரை, கதிரவெளி பிரதேசத்தில் 16 பாடசாலைகளும், படுவான்கரை பிரதேசத்தில் 89 பாடசாலைகளின் நிலைமைகளும் இவ்வாறே உள்ளது.

விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் தமிழ் மூல கல்விச் சீர்திருத்தம் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் தவிசாளர் திருமதி சாந்தி சச்சிதானந்தம் தலைமையில் கொழும்பு பல்கலைக்கழக கல்வி பீடாதிபதி பேராசிரியர் சோ. சந்திரசேகரம், சிறிலங்கா பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் தை தனராஜ், கொழும்பு பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளர் கலாநிதி கருணாநிதி ஆகியோர் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் உள்ள கல்வி பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து வருகின்றனர்.

சிங்கள மொழியில் இருந்துதான் தமிழ் மொழி மூலத்திற்கான பாடநூல்கள் மொழி பெயர்க்கப்படுகின்றன.

இது குறித்து இந்த கல்வியாளர் குழு ஆய்வு செய்து வருகின்றது. அந்த குழு வழங்கிய ஆங்கில அறிக்கையை சபையில் சமர்ப்பித்த பின்னர் தனது உரையை அவர் நிறைவு செய்தார்.

கருத்துகள் இல்லை: